/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவலமாக கிடக்கும் விளையாட்டு மைதானம்... அரசுக்கும் அமைச்சருக்கும் இது அவமானம்!
/
அவலமாக கிடக்கும் விளையாட்டு மைதானம்... அரசுக்கும் அமைச்சருக்கும் இது அவமானம்!
அவலமாக கிடக்கும் விளையாட்டு மைதானம்... அரசுக்கும் அமைச்சருக்கும் இது அவமானம்!
அவலமாக கிடக்கும் விளையாட்டு மைதானம்... அரசுக்கும் அமைச்சருக்கும் இது அவமானம்!
UPDATED : ஜன 22, 2024 02:07 AM
ADDED : ஜன 22, 2024 12:14 AM

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை என்று தமிழகத்தில் ஒரு துறை இருக்கிறது; அதற்கு முதல்வரின் மகன் தான் அமைச்சர். அந்தத் துறையின் லட்சணம் எப்படி இருக்கிறது என்பதற்கான சாட்சிகள் தான், இந்த விளையாட்டு மைதானங்கள்...தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில், இன்று வரை உருப்படியாக ஒரு சர்வதேச விளையாட்டு மைதானம் இல்லை என்பது வேதனை தரும் நிஜம்.
பெயருக்கு 'கேலோ விளையாட்டு போட்டி' ஒன்றை நடத்தி விட்டால், கோவையில் உள்ள பல ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு வசதியும் வாய்ப்பும் கிடைத்து விடுமா...மெட்ரோ ரயில் திட்டம், பல்நோக்கு மருத்துவ மனைகள் என திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மட்டுமின்றி, விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதிலும் சென்னைக்கு மட்டும் வெண்ணை; கோவைக்கு சுண்ணாம்பு வைக்கிறது இந்த அரசு.
இத்தனைக்கும் கோவை மண்டலத்தில், ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இருக்கிறார்கள்; பல்வேறு விளையாட்டுகளிலும், சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கான பயிற்சிக்களம், விளையாட்டு மைதானம் போதிய அளவு இருக்கிறதா என்பது கேள்விக்குறி. இருக்கும் ஒரேயொரு நேரு ஸ்டேடியத்திலும் ஆயிரமாயிரம் குறைபாடுகள், முறைகேடுகள்!.
இத்துறைக்கு உதயநிதி அமைச்சரான பின், ஏதேதோ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன; எல்லாமே இன்னும் அறிவிப்பாகவே உள்ளன. கோவையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாநகராட்சி, பள்ளிக் கல்வித் துறை என எந்தத் துறையால் பராமரிக்கப்படும் மைதானமாக இருந்தாலும், அத்தனையும் குப்பையும், கூளமுமாக, கல்லும் மண்ணுமாக, குடியும், குடிகாரர்களுமாகத்தான் நிறைந்துள்ளன.
வளர்ச்சியே பெறாத பல வட மாநிலங்களில், சின்னச் சின்ன நகரங்களில் கூட, பெரிய பெரிய விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன; சேலத்தில் மாநாடு நடத்திய செலவில், பத்தில் ஒரு பங்குத் தொகையை இங்கே செலவழித்திருந்தால் கூட, கோவைக்கு நல்லதாக நாலு மைதானங்கள் கிடைத்திருக்கும்.
விளையாட்டில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு, கோடிகளில் பரிசு வழங்குவதல்ல; பல ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி, அடுத்த தலைமுறையை ஆரோக்கியமுள்ளதாக மாற்றுவதே ஒரு நல்ல அரசுக்கு அழகு.
ஆனால் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, கோவையில் இதுகுறித்து ஓர் ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியதில்லை; களத்தில் இறங்கி கவனித்ததும் இல்லை.
உதயநிதி...அமைச்சராக இருப்பது விளையாட்டுக்கா....விளையாட்டுத் துறைக்கா?