/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாசஞ்சர் ரயிலில் பயணிகள் தொங்கி செல்லும் அவலம்; கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை
/
பாசஞ்சர் ரயிலில் பயணிகள் தொங்கி செல்லும் அவலம்; கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை
பாசஞ்சர் ரயிலில் பயணிகள் தொங்கி செல்லும் அவலம்; கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை
பாசஞ்சர் ரயிலில் பயணிகள் தொங்கி செல்லும் அவலம்; கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை
ADDED : அக் 14, 2024 11:32 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-கோவை இடையே இயக்கப்படும், மெமு பாசஞ்சர் ரயிலில், கூடுதல் பெட்டிகளை இணைக்க, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் காலை, 8:20, 10:55, பகல்,1:05, மாலை,4:45, 6:55 மணிக்கு கோவைக்கு, மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து, காலை, 9:50, 11:50, மதியம்,3:45, மாலை, 5:55, இரவு, 8:25 மணிக்கு, பாசஞ்சர் ரயில், தினமும் ஐந்து முறை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ளன. காலை, 8:20 மணிக்கு கோவை செல்லும் இந்த ரயிலில், 3,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.
காலையில் இருந்து இரவு வரை, இந்த ரயிலில் மொத்தமாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் போதே, உட்கார இடம் இல்லாமல், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர். இது அல்லாமல் காரமடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், இந்த ரயிலில் ஏறும்போது, மிகவும் சிரமத்திற்கு இடையே, பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பாசஞ்சர் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: இந்த ரயிலில் தினமும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், கட்டட தொழிலாளர்கள் பயணம் செய்கின்றனர். எட்டு பெட்டிகளில் மொத்தமாக, 614 பேர் மட்டுமே உட்கார்ந்து பயணம் செய்ய, சீட்டுகள் உள்ளன. இது அல்லாமல் ஆயிரம் பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும்.
ஆனால் மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இரண்டு ஸ்டேஷன்களில் இருந்து, 3,016 பேர் சீசன் டிக்கெட் எடுத்துள்ளனர். இவர்கள் காலை, 8:20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து, புறப்படும் ரயிலில், பயணம் செய்யக் கூடியவர்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவலின் பேரில், மொத்தமாக,1,614 பேர் பாசஞ்சர் ரயிலில் பயணம் செய்யலாம் என, தெரிவித்துள்ளனர்.
ஆனால், காலையில் பயணிகள், படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர். இது, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறினர்.