/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடரும் சிக்கல்! சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு; அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொது மக்கள்
/
தொடரும் சிக்கல்! சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு; அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொது மக்கள்
தொடரும் சிக்கல்! சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு; அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொது மக்கள்
தொடரும் சிக்கல்! சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு; அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொது மக்கள்
ADDED : ஜூலை 14, 2025 11:10 PM
பெ.நா.பாளையம்; ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதால், இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்ற நிலைமை உருவாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜன., 5ம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் விரைவில் ஊராட்சிகளுக்கான தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு உடனடியாக தேர்தல் நடத்தாமல், ஊராட்சி நிர்வாகத்தை சிறப்பு அதிகாரிகளின் வசம் ஆறு மாத காலத்துக்கு ஒப்படைத்தது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஒன்றிய ஆணை யாளர், துணை ஆணையாளர் வசமும், ஊராட்சி நிர்வாகங்கள் ஊராட்சி செயலாளர்கள் வசமும் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக அரசு ஊராட்சி தேர்தல் நடத்த உடனடி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த, 5ம் தேதி சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. ஆனால், தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்கள், அதாவது ஜூலை, 6ம் தேதி முதல், 2026ம் ஆண்டு ஜன., 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊராட்சி தேர்தல் இப்போதைக்கு நடக்க வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,' ஊராட்சியில் மன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்த போது, அவர்களிடம் தெருவிளக்கு, சாக்கடை, சாலை பராமரிப்பு, குடிநீர், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர முறையிட முடியும். சிலர் அவர்களால் இயன்ற அளவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால், தற்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியில் இல்லாத நிலையில், யாரிடம் எங்களுடைய குறைகளை கொண்டு செல்வது என தெரியவில்லை. பெரும்பாலான ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய ஆணையாளர்களிடம் முறையிட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அசோகபுரம், குருடம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவை இணைக்கப்படுமா, இல்லையா என்ற உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. பன்னிமடை ஊராட்சியின் நிலையும், இதே போல நீடிக்கிறது.
ஊராட்சிகளில், இதுவரை நடந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, ஜனநாயக நடைமுறைக்கு உயிர் கொடுக்கும் வகையில், ஊராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தி தலைவர், துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து, பொதுமக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.