/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு மணி நேரம் ஆழியாறு விவசாயிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரச பேச்சால் முடிவுக்கு வந்தது
/
ஆறு மணி நேரம் ஆழியாறு விவசாயிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரச பேச்சால் முடிவுக்கு வந்தது
ஆறு மணி நேரம் ஆழியாறு விவசாயிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரச பேச்சால் முடிவுக்கு வந்தது
ஆறு மணி நேரம் ஆழியாறு விவசாயிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரச பேச்சால் முடிவுக்கு வந்தது
ADDED : ஜன 30, 2024 11:46 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புதிய ஆயக்கட்டு விவசாயிகளின் ஆறு மணி நேர போராட்டம், அதிகாரிகள் சமரச பேச்சையடுத்து முடிவுக்கு வந்தது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால், பாசனத்துக்கு முறையாக நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அடுத்த சுற்றுக்கு, 21 நாட்கள் நீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் தலைமையில், திட்டக்குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் தாமோதரனை சந்தித்து வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்காததால், ஆழியாறு விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், நேற்றுமுன்தினம் இரவு வரை போராட்டம் நீண்டது.
இதையடுத்து, கண்காணிப்பு பொறியாளர் தாமோதரன், டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர். அதில், சப் - கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி, சுமுக தீர்வு காணலாம் என, தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில், அடுத்த சுற்றுக்கு கூடுதலாக நீர் வழங்க வேண்டி, கடந்த ஒரு மாதமாக இரண்டு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
தற்போது அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு, 21 நாட்களுக்கு, 672 மில்லியன் கனஅடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்காததால் போராட்டம் நீடித்தது. தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில், உயர் மட்ட குழு பரிந்துரையின் படியே நீர் அளவு, நாட்கள் இருக்க வேண்டும்.
வாட்டர் பட்ஜெட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதற்கு அதிகாரிகள், சப் - கலெக்டர் முன்னிலையில் பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர்.
இது குறித்து, விவசாயிகளிடம் தெரிவித்து சம்மதம் பெற்றதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மதியம் பேச்சு நடத்தி தோல்வியடைந்த நிலையில் மாலை, 4:00 மணி முதல் இரவு, 10:41 மணி வரை போராட்டம் நீடித்தது.
விவசாயிகள் அங்கேயே தங்கி முடிவு தெரியும் வரை காத்திருந்ததால் பி.ஏ.பி., வளாகம் பரபரப்பாக இருந்தது. பின், அதிகாரிகள் பேச்சில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, ஆறு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.