/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது
/
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது
ADDED : பிப் 16, 2024 11:51 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பல்வேறு தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், மறியல் போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில், எச்.எம்.எஸ்., மாநில அமைப்பு செயலாளர் மனோகரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவம், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, மின்சார வாரிய தலைவர் கோவிந்தன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். தொழிலாளர் விரோத சட்டதொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்.
இலவச கல்வி, சுகாதாரம், தண்ணீர், உடல்நல உரிமை அனைவருக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கை, 2020யை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட, 15 பெண்கள் உள்பட, 159 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
உடுமலை
அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணி சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்.பி.எப்., தி.மு.க., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., தொழற்சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொழிலாளர்களுக்கு, மாதம், 26 ஆயிரம் ரூபாய்க்கு குறையாத குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு, வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்தி செலவில், 50 சதவீதம் கூடுதல் விலை அறிவித்து, சட்டமாக இயற்ற வேண்டும்.
மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புக்கு, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதன்பின், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில், 140 பெண்கள் உட்பட்ட, 260 பேரை போலீசார் கைது செய்தனர். ஐக்கிய விவசாய முன்னணி, ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.