/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் வளர்ச்சியில் இரும்பின் பங்கு
/
தொழில் வளர்ச்சியில் இரும்பின் பங்கு
ADDED : செப் 30, 2025 10:53 PM

இ ந்திய தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் நடராஜன் கூறியதாவது:
சக்கரத்துக்குப் பிறகு மனித இனத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இரும்பு. ஆதி மனிதனின் விவசாயத்துக்கும், போருக்கும் இரும்பு முக்கியான ஒரு தேவை.
18ம் நூற்றாண்டில், முதல் தொழிற்புரட்சிக்குப் பின், இரும்பின் தேவை உலகம் முழுக்க அதிகரித்தது. 2ம் தொழிற்புரட்சி இந்தியாவில் இரும்பின் பயன்பாடு பெருமளவு அதிகரிக்க வழி வகுத்தது. ஜாம்ஷெட்ஜி டாடா இந்தியாவி ன் இரும்பு தொழிற்சாலையை நிறுவிய பிறகு இந்திய தொழிற்துறைக்கு மிகப்பெரும் அடித்தளம் அமைந்தது. வேளாண்மை, அணைகள், சாலை, உட்கட்டமைப்புகள், குடியிருப்புகள் என இரும்பு நம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்தே இருக்கிறது.
இந்தியா விடுதலை பெற்றபோது, நமது தனிநபர் இரும்பு நுகர்வு ஒரு கிலோ. கடந்த 2000ல் இது 27 கிலோ, 2013ல் 50 கிலோ. இன்று இரும்பின் நுகர்வு 100 கிலோ. வியத்தகு வளர்ச்சி என்றபோதும் வளர்ந்த நாடுகளில் இந்த சராசரி 200 கிலோவுக்கு மேலே உள்ளது. விரைவில் நாமும் அந்த நிலையை எட்டுவோம்.
இரும்பு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக நாம் இருக்கிறோம் என்பது நம் வளர்ச்சிக்கான பெருமைமிகு சான்று.
கோவையின் வளர்ச்சியில் இரும்பின் பங்கு இன்றியமையாதது. தொழிற்சாலை இயந்திரங்கள் , பவுண்டரிகள், நூற்பாலை இயந்திரங்கள், வேளாண் கருவிகள், அச்சு இயந்திரங்கள், மோட்டார் , பம்புகள் , உலகெங்கும் ஏற்றுமதியாகும் பல்வேறு விதமான உபகரணங்கள் என, இரும்பின் உபயோகம் கோவையில் பரந்துபட்டதாக உள்ளது.
இன்று இந்தியாவில் செய்ல், டாடா, ஜெ.எஸ்.டபிள்யூ., ஆர்.ஐ.என்.எல்., உள்ளிட்ட பல பெரும் இரும்பு உருக்காலைகள் கிட்டத்தட்ட 13 கோடி டன்னை உற்பத்தி செய்கின்றன. வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும்.
இரும்பு உற்பத்தியில் இந்தியா, வல்லமை மிக்க மையமாக திகழும் சூழல் உள்ளது. அரசின் துணையுடன், தொழில்துறை இதைச் சாதிக்கும். இதில் கோவையின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.
5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை செம்மையாக பயன்படுத்திய தொன்மை தமிழர்களுடையது என்பதற்கான சான்றுகள் வெளியாகி வருகின்றன. அந்த பாரம்பரியத்துடன், தமிழகத்தின் தொழில் கேந்திரமான கோவை, இரும்பின் பயன்பாட்டில் இந்தியாவில் சிறப்பான இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.