/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எகிறுது 'பீக் ஹவர்ஸ்' படபடப்பு!
/
எகிறுது 'பீக் ஹவர்ஸ்' படபடப்பு!
ADDED : மே 12, 2025 12:25 AM

பள்ளிகள், கல்லுாரிகள், ஐ.டி., நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் என, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ஒரு பெரிய தொழில் நகரமாக திகழ்கிறது. வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து கல்வி, வேலை போன்ற தேவைகளுக்கு இந்நகருக்கு, படையெடுப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
இதனால், மாநகர பகுதிகளில் வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 'பீக்' ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை குறைக்க, போக்குவரத்து போலீசார் தரப்பில், ரவுண்டானா அமைப்பது, 'யூ டர்ன்' ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும், குறுகலான சாலை, சிக்னல், சந்திப்பு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளிட்டவை இருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடிவதில்லை.
மாநகரில் முக்கிய சாலைகளான அவிநாசி ரோடு மேம்பாலம், காந்திபார்க், சிங்காநல்லுார், வடகோவை, கிராஸ்கட் ரோடு, பார்க் கேட், அவிநாசி சாலை விமான நிலையம் அருகில், உக்கடம், போத்தனுார், பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் சந்திப்பு போன்ற இடங்களில் காணப்படும் வாகன நெரிசல், 'இப்பவே இப்படின்னா எதிர்காலம் எப்படியிருக்குமோ' என்று பயப்பட வைக்கிறது. காந்தி பார்க் அருகில், உப்பிலிபாளையம் போன்ற பகுதிகளில், சாலை சந்திப்பு உள்ள இடங்களில் நான்கு புறமும் வாகனங்கள் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது.
போலீசார் இவ்விடங்களை கண்டறிந்து, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்.
சிக்னல் அருகில், சாலை சந்திப்பு பகுதிகளில் இருக்கும் பஸ் ஸ்டாப்களை மாற்றி அமைக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை முன்புறம் போன்ற, குறுகலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, 'யூ டர்ன்'களை ஆய்வு செய்து, நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.