ADDED : மார் 12, 2026 04:44 AM

காரமடை: வெயில் தாக்கத்தால், பசுந்தீவன உற்பத்தி குறைந்து, கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெயிலின் தாக்கம் இப்போதே தெரிய துவங்கியுள்ளது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களும், நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று, உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுஒருபுறம் இருக்க, கால்நடைகளின் முக்கிய உணவான பசுந்தீவன விளைச்சலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, குமரன்குன்று பகுதி விவசாயி பாலுசாமி கூறியதாவது:
காரமடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பசுந்தீவன விளைச்சல் குறையத் தொடங்கியது. கால்நடைகளை அதிக துாரம் மேய்ச்சலில் ஈடுபடுத்த முடிவதில்லை. மேய்ச்சல் நிலங்களில் புற்கள் காய்ந்துள்ளன.
தென்மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்படும் வைக்கோல் விலையும் அதிகரித்துள்ளது. பசுந்தீவனம் பற்றாக்குறையால், பால் உற்பத்தியும் குறைந்துள்ளது. கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளின் நிலை சிரமமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
காரமடை வட்டார கால்நடை மருத்துவர் விமலாதேவி கூறியதாவது:
கோடைகாலத்தில், பகல் நேரங்களில் மேய்ச்சலில் ஈடுபடுத்துவதை விட, அதிகாலை முதல் பகல் 11:00 மணி வரையும், மாலையில் 4:00 மணிக்கு மேல் 6:00 மணி வரையும் மேய்ச்சலில் ஈடுபடுத்தலாம். கால்நடைகளின் உடல் சூட்டை தணிக்க, அவ்வப்போது நீர் ஊற்றலாம். நிழல்களில் கட்டி வைக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை அணுக வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
