/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிர்க்கடன் பெறுவதற்குள் பருவம் முடிஞ்சுப்போகுது வெறும் புகார் மட்டுமல்ல... விவசாயிகளின் வாழ்வாதாரம்
/
பயிர்க்கடன் பெறுவதற்குள் பருவம் முடிஞ்சுப்போகுது வெறும் புகார் மட்டுமல்ல... விவசாயிகளின் வாழ்வாதாரம்
பயிர்க்கடன் பெறுவதற்குள் பருவம் முடிஞ்சுப்போகுது வெறும் புகார் மட்டுமல்ல... விவசாயிகளின் வாழ்வாதாரம்
பயிர்க்கடன் பெறுவதற்குள் பருவம் முடிஞ்சுப்போகுது வெறும் புகார் மட்டுமல்ல... விவசாயிகளின் வாழ்வாதாரம்
ADDED : நவ 09, 2025 10:51 PM

அன்னுார்: 'மும்முனை மின்சாரம் இல்லாததால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் பாதிக்கின்றன.
பயிர்க்கடன் பெற விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்' என, விவசாயிகள் சங்க கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக்கூட்டம், கரியா கவுண்டனூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மயில்சாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
விவசாயிகள் பேசியதாவது:
அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 17 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர் கடனுக்கு விண்ணப்பித்தால், அதற்கான தொகையை, அன்னுார் நகரில் உள்ள மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கியில் பெறும்படி கூறுகின்றனர். அங்கு தினமும், 10 பேருக்கு மட்டுமே தொகை உள்ளது என்று கூறி, மறுநாள் வரும்படி கூறுகின்றனர். பயிர்க்கடன் பெற விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
வடக்கலுார் குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை ஊராட்சிகளில், மும்முனை மின்சாரம் சில மணி நேரம் மட்டுமே வருகிறது.
இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் பாதிக்கின்றன. தற்போது பெத்திக்குட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகிக்கப்படுகிறது. பசூரிலிருந்து மின் வினியோகிக்க வேண்டும் என, 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். குளம், குட்டைகளில் கோழிக்கழிவு, மனிதக்கழிவு, ஊராட்சி குப்பை கொட்டப்படுகின்றன. இதை தடை செய்ய வேண்டும். வேளாண் அதிகாரிகள் தோட்டங்களுக்கு வருவதில்லை. காட்டுப்பன்றி மற்றும் மயில்கள் தொல்லையால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. யூரியா குறைந்தளவே தருகின்றனர்.
வாழை பயிரிடும் பரப்பளவு அதிகரித்ததால் விலை கடுமையாக சரிந்துள்ளது. வாழை ஏற்றுமதிக்கு, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.
தற்போது பெத்தி குட்டையில் இருந்து மின் வினியோகிக்கப்படும் வடக்கலுார் உட்பட ஊராட்சிகளுக்கு, பசூரிலிருந்து மின் வினியோகிக்க வேண்டும். அன்னுாரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி செல்ல ராஜாமணி, விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளர் வெள்ளிங்கிரி, துணை செயலாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

