/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழையடி வாழையாய் தொல்லை: போக்கு காட்டும் காட்டுப்பன்றிகள்
/
வாழையடி வாழையாய் தொல்லை: போக்கு காட்டும் காட்டுப்பன்றிகள்
வாழையடி வாழையாய் தொல்லை: போக்கு காட்டும் காட்டுப்பன்றிகள்
வாழையடி வாழையாய் தொல்லை: போக்கு காட்டும் காட்டுப்பன்றிகள்
ADDED : நவ 09, 2025 10:51 PM

மேட்டுப்பாளையம்: 'நன்கு முதிர்ந்த வாழைக்காய்களை, காட்டுப்பன்றிகள் முழுமையாக உட்கொள்வதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகள், நேந்திரன், கதளி ஆகியவற்றை அதிகளவிலும், பூவன், ரஸ்தாலி, செவ்வாழை, ரோபஸ்டா ஆகிய வாழைகளை குறைவாகவும் பயிர் செய்து வருகின்றனர். சமீப காலமாக காட்டுப்பன்றிகள், தோட்டத்தில் புகுந்து, மரத்தை முறித்து காய்களை முழுமையாக உட்கொள்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறியதாவது:
மிகுந்த சிரமத்துக்கு இடையே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் தாலுகாவில் வாழை விவசாயம் அதிகளவில் நடக்கின்றன. நடவு செய்த இரு மாதங்களில் இளம் குருத்து இலைகளை மான்கள் சாப்பிடுகின்றன. நன்கு வளர்ந்த வாழைகளை யானைகள் முறித்து அதன் தண்டுகளை சாப்பிடுகின்றன.
சமீப காலமாக காட்டு பன்றிகள், வாழைத் தோட்டத்தில் புகுந்து, நன்கு முதிர்ந்த வாழைக்காய் மரத்தை சேதப்படுத்தி, அனைத்து காய்களையும் உட்கொள்கின்றன. தினமும் ஒவ்வொரு தோட்டத்திலும், பத்துக்கு மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நுழைந்து, வாழை மரங்களை சேதப்படுத்துகின்றன. இதை விரட்டவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காட்டு பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க, வனத்துறையினர் போதியளவில் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆயிரக்கணக்காக நஷ்டம் ஏற்படுகிறது.
பன்றிகளால் சேதம் அடைந்த விவசாய வாழைத்தோட்டத்தில், வேளாண் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த வாழைகளுக்கு முழு அளவில் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் வருவதை தடுக்கவில்லை என்றால், இப்பகுதியில் வாழை விவசாயம் அழியும் நிலை ஏற்படும்.
இவ்வாறு, வேணுகோபால் கூறினார்.
காரமடை அடுத்த பணப்பாளையத்தில் வேணுகோபால் தோட்டத்தில், காட்டுப் பன்றிகள் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

