/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனதை பிசையும் மண் மைந்தர்கள் கதை!
/
மனதை பிசையும் மண் மைந்தர்கள் கதை!
ADDED : டிச 28, 2025 05:11 AM

''வே று வேலைக்கு சென்றால் குலத்தொழில் அழிந்துவிடும் என்பதாலே, படித்தும் கூட, வைராக்கியமாக மண்ணில் கை வைத்தேன். ஆனால், அந்த மண் கிடைக்க நாங்கள் படும் பாடு சொல்லி மாளாது,'' என்கிறார் கவுண்டம்பாளையம் குயவர் சிவலிங்கம்.
இவர் நம்மிடம் பகிர்ந்தவை:
எங்கள் தொழிலின் மூலப்பொருள் களிமண் தான். ஆனால், இங்கே மண் கிடைப்பதில்லை. ஒரு டெம்போ மண் வாங்க, 10 ஆயிரம் வரை செலவாகிறது. பானையை சுடுவதற்கு விறகு வாங்க வேண்டும். வெயில் அடித்தால் தான் அதை உலர்த்த முடியும். இப்படி எங்கள் தொழிலுக்கான அனைத்தும் இயற்கை ஆதாரங்களை நம்பியுள்ளது. மாதம் முழுக்க, குடும்பத்தில் உள்ள அனைவரும் உழைத்தால் தான், 10-15 ஆயிரம் ரூபாய் வரை காசு பார்க்கலாம்.
மழை, குளிர் காலங்களில், மண்ணில் கை வைக்க முடியாது. சீசன் சமயங்களில், களிமண் கிடைக்காமல் நாங்கள் படும்பாடு சொல்லி மாளாது. இருந்தும், இம்மண்ணை பிசைந்து, அதற்கு வடிவம் கொடுப்பதில் இருக்கும் ஆத்ம திருப்தி வேறு எந்த தொழிலிலும் ஏற்படுவதில்லை.
நான் டிப்ளமோ (இ.இ.இ.,) முடித்துள்ளேன். தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றால், கை நிறைய சம்பாதிக்கலாம். ஆனால், அப்பாவிற்கு பிறகு இத்தொழில் இல்லாமலே போய்விடுமோ என்ற ஆதங்கமே, என்னை இதற்குள் இழுத்துவந்தது, என்றார்.
இதில் உங்கள் தனித்துவம் என்ன என்றதும், ஆர்வத்தோடு அவர் உருவாக்கியதை காட்டினார். ' அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களை விட, மண்பாத்திரங்கள் உடலுக்கு எந்த தீமையும் செய்யாதவை. இந்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. குழம்பு வைக்கும் மண்பானைக்கு அதிக ஆர்டர் வருகிறது.
இதுதவிர குல்பி ஐஸ் சாப்பிட குட்டி மண்பானைக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. டீ குடிக்கும் கப், ஓட்டல்களில் வாடிக்கையாளர்களை கவர, குட்டி குட்டி மண்பாத்திரங்களில், உணவு பரிமாறுவது டிரெண்டாகி வருவதால், அதற்கான ஆர்டர்களும் வருகின்றன.
பறவைகளுக்கு சிறுதானியங்கள், தண்ணீர் வைக்க மண்பாத்திரங்களை கேட்டு வாங்கி செல்கின்றனர். எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, கடைகளில் அதிக விலைக்கு விற்கின்றனர். எந்த தொழிலில் தான் உற்பத்தியாளனுக்கு, லாபம் கிடைத்துள்ளது,'' என்றபடியே களிமண்ணை பிசைய ஆரம்பித்தார்.
'தண்ணியிலே கோலம் போடு...; ஆடிக்காற்றில் தீபம் ஏற்று!' என்ற வரிகள் காற்றில் கரைந்து கொண்டிருக்க, நாங்கள் விடைபெற்றோம்.

