/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலால் குறையும் காய்ப்பு தன்மை; காய்கறி வரத்து சரிகிறது
/
வெயிலால் குறையும் காய்ப்பு தன்மை; காய்கறி வரத்து சரிகிறது
வெயிலால் குறையும் காய்ப்பு தன்மை; காய்கறி வரத்து சரிகிறது
வெயிலால் குறையும் காய்ப்பு தன்மை; காய்கறி வரத்து சரிகிறது
ADDED : மார் 31, 2025 09:46 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு சுற்றுப்பகுதிகளில், கத்தரி, வெண்டை, பீட்ரூட், முருங்கை, பீன்ஸ், செடி அவரை, தக்காளி, காளிபிளவர், முள்ளங்கி, சுரைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள், பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இப்பகுதி விவசாய நிலங்களில், நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
விவசாய நிலத்தில் தண்ணீர் இல்லாமல், காய்கறி சாகுபடி பரப்பும் தரிசுகளாக மாறி வருகிறது. பொய்த்துப்போன பருவமழை, பயிர்களில் நோய் தாக்குதல், விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால், மார்க்கெட்டில் காய்கறி வரத்து சரிந்து, விலையும் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது:
கோடை வெயிலின் தாக்கத்தால், காய்கறி செடிகள் பூக்கும் தன்மையை இழந்து காணப்படுகின்றன. ஏற்கனவே, பூ பூத்த செடிகளும் கருகி விடுகின்றன. புழுக்கத்தின் காரணமாக, பூச்சி தாக்குதலும் அதிகரிக்கிறது.
இதனால் காய்ப்பு தன்மை குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மார்க்கெட்டில், கடந்த வார விலையை ஒப்பிடுகையில், தக்காளி, 15 கிலோ பெட்டி 150 ரூபாய்; முருங்கை கிலோ -15; பாகற்காய் - 40; அவரை - 50 ரூபாய் வரை விற்பனையானது. அதாவது, காய்கறி விலை, சராசரியாக 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இவ்வாறு, கூறினர்.