/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்கு ஊரு மாறுது! தொழில்வரி உயர்வில் ஆசிரியர்கள் குழப்பம்; 'ஆன்லைன் ஸ்லாப்'ல் மாறாததால் திணறல்
/
ஊருக்கு ஊரு மாறுது! தொழில்வரி உயர்வில் ஆசிரியர்கள் குழப்பம்; 'ஆன்லைன் ஸ்லாப்'ல் மாறாததால் திணறல்
ஊருக்கு ஊரு மாறுது! தொழில்வரி உயர்வில் ஆசிரியர்கள் குழப்பம்; 'ஆன்லைன் ஸ்லாப்'ல் மாறாததால் திணறல்
ஊருக்கு ஊரு மாறுது! தொழில்வரி உயர்வில் ஆசிரியர்கள் குழப்பம்; 'ஆன்லைன் ஸ்லாப்'ல் மாறாததால் திணறல்
ADDED : செப் 19, 2024 09:58 PM

பொள்ளாச்சி : ஊராட்சிகளில், இரண்டு விதமான தொழில் வரி வசூலிப்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்குரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம், 118 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
ஊராட்சிகளில், தொழில் வரியாக, ஆறு மாதத்துக்கு, 1,250 ரூபாய் ஆசிரியர்கள் செலுத்தி வந்தனர். தற்போது, ஊராட்சிகளில் இருவிதமாக வரி வசூலிப்பதால் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: ஆறு மாதத்துக்கு ஒரு முறை, 1,250 ரூபாய் தொழில் வரியாக செலுத்தப்படுகிறது. தற்போது, ஊராட்சிகளில் வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி, 1,565 ரூபாயாக செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். அதே நேரத்தில், ஒரு சில ஊராட்சிகளில் பழைய தொழில்வரியான, 1,250 ரூபாய் மட்டுமே பெறுகின்றனர். தொழில் வரி உயர்த்தப்பட்டது என்றால் முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒரே ஒன்றியத்தில், குறிப்பிட்ட ஊராட்சிகளில் பழைய வரியும், மற்ற ஊராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரி எனக்கூறி புதிய வரியையும் வசூலிக்கின்றனர். ஒரே ஒன்றியத்தில் எப்படி இருவிதமான வரி வசூலிக்கப்படுகிறது என அதிகாரிகளிடம் கேட்டாலும் முறையாக விளக்கம் கொடுப்பதில்லை. எந்த தொழில் வரியை செலுத்த வேண்டும் என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது.
மாவட்டம் முழுவதும் இந்த குழப்பம் நிலவுகிறது. இதற்குரிய விளக்கத்தை முறையாக தெரிவிக்க வேண்டும். வரி உயர்த்தப்பட்டால் அதற்கான அரசாணை காண்பித்து வசூலிக்க வேண்டும். இக்குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
25 சதவீதம் உயர்வு
ஊராட்சி செயலர்கள் கூறியதாவது:
தொழில் வரி வசூல் அரசாணை எண்: 8ன் படி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில், கடந்த, ஏப்., மாதம் மாற்றம் செய்யப்பட்டது. ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி தற்போது தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு, 198 பி(2) மற்றும் தமிழ்நாடு கிராம ஊராட்சிகள் (அரசு பணியாளர்கள், தொழில்கள், வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களிடம் தொழில் வரி வசூலித்தல்) விதிகள், 2000 ஆகியவைகளின் படி தொழில் வரி, 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரியாக, 155 ரூபாய் செலுத்தி வந்தவர்கள், 199 ரூபாயும்; 375 செலுத்தியவர், 470 ரூபாய்; 740 செலுத்தியவர்கள், 925 ரூபாய்; 1,115 செலுத்தியவர்கள், 1,400 ரூபாய்; 1,250 செலுத்தியவர்கள், 1,565 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சரியாகும்!
ஊராட்சிகளில் தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக வரி வசூல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய வரி மாற்றம் செய்தாலும், 'ஆன்லைன் ஸ்லாப்'பில் மாறாமல் பழைய வரிக்கான தொகையே வருகிறது. இதனால், ஒரு சில ஊராட்சிகளில் பழைய வரியே வசூலிக்கப்படுகிறது.
ஒரு சில ஊராட்சிகளில், புது அசஸ்மென்ட் போட்டு செய்வதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி வரி உயர்த்தியது உண்மை தான். அதே நேரத்தில், இந்த குழப்பம் குறித்து மாவட்ட நிர்வாகம் வாயிலாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 'ஆன்லைன்' பிரச்னையை சரி செய்தால் குழப்பம் தீர்ந்து விடும்.
இவ்வாறு, கூறினர்.