ADDED : ஏப் 23, 2025 10:23 PM

பொள்ளாச்சியில் எங்கு பார்த்தாலும் நிழல் அளிக்கும் மரங்கள், கிராமங்களை சுற்றி செல்லும் ஆழியாறு ஆறு, தென்னந்தோப்புகள், வயல்வெளிகள் என, சுற்றுலா பயணியரை கவரும் அம்சங்கள் ஏராளம்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, டாப்சிலிப்வனச்சரகங்கள், சுற்றுலா பயணியருக்கு பூலோக சொர்க்கமாக உள்ளன என்றால் மிகையாகாது.
ஆழியாறு அணை, மீன் பண்ணை, பட்டாம் பூச்சி பூங்கா, மூலிகை பண்ணை, கவியருவி என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. வால்பாறை ரோட்டில் உள்ள, 40 கொண்டைஊசி வளைவுகளும், த்ரிலான அனுபவத்தை கொடுக்கின்றன.
இயற்கையும், ஆன்மிகமும் கலந்த பகுதியாக உள்ள பொள்ளாச்சியின் அழகை, ஏராளமான சினிமாக்கள் படம் போட்டு காட்டுகின்றன.
அதோ கதி
ஆழியாறு அணையில் கோட்டூர் பேரூராட்சி சார்பில், இயக்கப்பட்டு வந்த படகு சவாரி பத்தாண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது; இன்றுவரை மீண்டும் துவக்கப்படவில்லை. அணையில் படகு சவாரிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது.
ஆழியாறு பூங்காவை ஒட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள பார்க்கிங் இடம் சிறியதாக இருப்பதால், வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கவியருவியிலும் இதே நிலைதான்.
வழிகாட்டுதல் தேவை
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்கள், வழித்தடம், தங்கும் வசதிகள் குறித்து விளக்கும் வகையில் தகவல் மையம் அமைக்க வேண்டும். சுற்றுலா வருவோருக்கு 'கைடு' வசதி ஏற்படுத்தினால், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டாப்சிலிப் பகுதியிலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான திட்டங்கள் எதுவுமே இல்லை. சுற்றுலாவை மேம்படுத்த உரிய திட்டமிடலை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
அதிருப்தி
வால்பாறை நகரில் நகராட்சி சார்பில், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா, தற்போது புதர் சூழ்ந்து கிடப்பதோடு, எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், சுற்றுலா பயணியர் பூங்காவுக்குள் செல்வதில்லை. பெயரளவுக்கு கூட பூச்செடிகள் இல்லை.
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட படகு இல்லத்தின் ஒரு பகுதியில், கழிவு நீர் தேங்கி நிற்பதால், படகுசவாரி செல்ல அச்சப்படுகின்றனர்.
வால்பாறை வரும் சுற்றுலா பயணியரிடம் வனத்துறை சார்பில், கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. இதனால், சுற்றுலா வருவோர் அதிருப்தியடைந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

