/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அருணகிரிநாதர் வருகை கோவையின் பெருமை
/
அருணகிரிநாதர் வருகை கோவையின் பெருமை
ADDED : டிச 21, 2025 05:10 AM
திருவண்ணாமலையில் அவதரித்த அருணகிரிநாத சுவாமிகள், முருகப் பெருமானிடம் அளவில்லா அன்பு கொண்டு, தென்னாடு முழுவதும் பயணம் செய்து, முருகன் கோவில்களை தரிசித்து, அருமையான திருப்புகழ் பாடல்களை அருளிச் செய்த மகானாக விளங்கினார்.
தென்னாட்டின் பல பகுதிகளைச் சுற்றிய அருணகிரிநாதர், கொங்குநாட்டுக்கும் வந்தார். கொங்குநாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்கள், வைப்பு தலங்கள், புராணத் தலங்கள் மட்டுமின்றி, குன்றுகளில் அமைந்த முருகன் தலங்களுக்கும் சென்று, அங்கு திருப்புகழ் பாடி அருளினார்.
கோவைப் பகுதிக்கு அருகிலுள்ள பல தலங்கள், அவரது திருப்புகழ் பாடல்களால் இன்றும் புகழ் பெற்றுத் திகழ்கின்றன.
பேரூரில், 'தீராப்பிணி தீர… பேரூர்ப் பெருமாளே' என்று பாடி, அத்தலத்தின் தெய்வீகச் சிறப்பை உலகறியச் செய்தார். மருதமலையில், 'திரிபுரமதனை ஒருநொடியதனில்… அணிசெயும் மருதமலையோனே' என்று பாடி, அங்குள்ள முருகப்பெருமானின் வீரத்தையும் கருணையையும் போற்றினார்.
கிணத்துக்கடவில் உள்ள கனகமலையில், 'அரிவையர்கள்… கனககிரியிலகு கந்தப் பெருமாளே' என்று பாடி, கனகமலையின் ஆன்மிக ஒளியை உயர்த்தினார்.
குருடிமலையில் 'கருடன் மிசைவரு… குருடி மலையுடை முருக' என்றும், தென்சேரி மலையில், 'என் கேனும் ஒருவர் வர… தென்சேரி கிரியில்வளர் பெருமாளே' என்றும் பாடி, அந்தத் தலங்களைப் புனிதமாக்கினார்.
அவிநாசியில், 'இறவாமல் பிறவாமல்… அவநாசிப் பெருமாளே' என்று பாடி, பிறவிப் பிணியிலிருந்து விடுதலை தரும் இறைவனின் பெருமையை எடுத்துரைத்தார்.

