/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
/
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
ADDED : ஆக 03, 2025 11:41 AM

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் 'தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்துள்ளது.
செஞ்சேரிமலை நந்தவன திருமட வளாகத்தில் நேற்று (30/06/25) நடைபெற்ற இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டத்தில், ஈஷாவின் தொடர்ச்சியான வழிகாட்டுதலால் இந்த வளர்ச்சியை எட்ட முடிந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதில் இந்நிறுவனத்தின் தலைவர் கதிரேசன், இயக்குனர்களான ரவிச்சந்திரன் கருப்புசாமி, சிவகுமார் பழனிசாமி, கீதா சத்தியசீலன் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நளதா,ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் உறுப்பினர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு பொது கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட வர்த்தக ஆண்டறிக்கையின் படி 24-25 நிதியாண்டில் தேங்காய் மற்றும் இளநீர் வர்த்தகம் ரூ.5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23-24 ஆம் நிதியாண்டில்,
ரூ.1.50 கோடி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 24-25 நிதியாண்டில் மட்டும் வர்த்தகம் 220 சதவீதம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் கதிரேசன் கூறுகையில் 'இந்த பகுதி விவசாயிகள் அனைவருக்கும் நாம் விளைவிக்கிறோம், ஆனால் விலையை நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை, நம்முடைய பொருளுக்கு யாரோ ஒருவர் விலை நிர்ணயம் செய்கிறார் என்ற ஆதங்கம் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்ற தேடுதலில் இருந்த போது ஈஷா அமைப்பு எங்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது என்றே கூற வேண்டும். அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக எங்களையும் சேர்த்துக் கொண்டு உதவி செய்கின்றனர். விளைபொருள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் அவர்களின் வழிகாட்டுதல் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது” எனக் கூறினார்.
இந்நிறுவனத்தின் உறுப்பினர் விவசாயி இராமசாமி கூறுகையில், “இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு வியாபாரிகளுக்கு தேங்காய்களை விற்று வந்தோம். அப்போது அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை. அதில் மட்டை, காய், பருப்பு எது எவ்வளவு என்பது எல்லாம் தெரியாது.
ஆனால் இந்நிறுவனத்தில் இணைந்தது மூலம், சந்தையில் நல்ல விலை தரும் வியாபாரிகள் வந்து மட்டையை உரித்து தேங்காய் மட்டும் எடை போட்டு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் நல்ல விலை கிடைப்பதோடு அடுத்த நாளே பணம் நமது வங்கி கணக்கிற்கு வந்து விடுகிறது. லாபமும் அதிகமாக கிடைக்கிறது. ஆனால் முன்பு எப்போது பணம் வரும் என்றே தெரியாது. மேலும் தென்னை சாகுபடி சார்ந்த பல பயிற்சிகளையும் பெறுகிறோம். இது எங்கள் பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது” எனக் கூறினார்.
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில், தமிழ்நாட்டில் 19 மற்றும் கர்நாடகாவில் 6 என மொத்தம் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இணைந்தனர்.
தென்னையை பிரதானப் பயிராக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் வர்த்தகம் முதல் ஆண்டிலேயே 1 கோடியை கடந்து நடைபெற்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் நாபர்டு வங்கியின் சிறந்த FPO விருதினை இந்நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம், விவசாயிகள் ஒன்றிணைந்து நிறுவனமாக செயல்படும் போது, விளைப்பொருளுக்கான சரியான சந்தை விலையை விவசாயிகளே நிர்ணயிப்பதோடு, லாபம் நேரடியாக அவர்களுக்கு கிடைக்கிறது. மேலும் பயிர் வாரியான பயிற்சிகள் மூலம் இடுபொருள் செலவு குறைவதோடு விளைச்சலும் அதிகமாகிறது.