/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 2,048 ஓட்டுச்சாவடிகள் லோக்சபா தேர்தலில் அமைகின்றன
/
கோவையில் 2,048 ஓட்டுச்சாவடிகள் லோக்சபா தேர்தலில் அமைகின்றன
கோவையில் 2,048 ஓட்டுச்சாவடிகள் லோக்சபா தேர்தலில் அமைகின்றன
கோவையில் 2,048 ஓட்டுச்சாவடிகள் லோக்சபா தேர்தலில் அமைகின்றன
ADDED : ஜன 25, 2024 06:32 AM
கோவை : வரும் லோக்சபா தேர்தலுக்கு, கோவை மாவட்டத்தில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், பொள்ளாச்சி, வால்பாறை, தொண்டாமுத்துார் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகள் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குள் சென்று விடுகின்றன. மேட்டுப்பாளையம் தொகுதி, நீலகிரிக்கு போய் விடுகிறது.
மீதமுள்ள கோவை தெற்கு, வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம், சிங்காநல்லுார், சூலுார் ஆகிய ஐந்து தொகுதிகளுடன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் தொகுதியை சேர்த்து, ஆறு சட்டசபை தொகுதிகள், கோவை லோக்சபா தொகுதியில் அடங்குகின்றன.
2019ல் நடந்த தேர்தலில், அப்போதிருந்த வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப, 2,045 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது, 20.83 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
அதனால், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கையும், 2,048 என கூடுதலாக்கப்பட்டிருக்கிறது. இதில், சூலுார் தொகுதியில் 329, கவுண்டம்பாளையம் - 435, கோவை வடக்கு - 298, கோவை தெற்கு - 251, சிங்காநல்லுார் - 323, பல்லடம் - 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
2019ல் தமிழகத்தில் ஏப்., 18ல் லோக்சபா தேர்தல் நடந்தது; மார்ச் 11ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வரும் ஏப்., 16ல் தேர்தல் நடத்தப்படலாம் என, உத்தேசமாக கணக்கிட்டு, ஆயத்தப் பணிகளை துவக்க, தேர்தல் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
அதேபோல், நடப்பாண்டும் மார்ச் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பிரிவினர் மேலும் கூறுகையில், 'ஓட்டுச்சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உள்ளன. தேர்தல் தேதி அறிவித்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து, தேவையான வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்டு, அவற்றை உறுதி செய்வர்' என்றனர்.