UPDATED : மே 19, 2026 06:30 PM
ADDED : மே 19, 2026 06:14 PM
கோவை:அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் துறையில், கடந்த ஏப்., மாதம் மட்டும் ஆயிரத்து 787 வெளிநோயாளிகள், ஆயிரத்து 400 உள்நோயாளிகளுக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள், அவர்களுடன் வருவோருக்கு, போதிய கழிப்பறை வசதி இல்லை. பழுதடைந்த நிலையில் உள்ள கழிப்பறையும் சரிசெய்யப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளது அதில், நோயாளிகளின் துணி, நாப்கின், குப்பை கொட்டி வைக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதை சுத்தப்படுத்தாததால், சிறந்த சிகிச்சை கிடைத்தும், நோயாளிகள் தங்குவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், 'ஏழு மாதங்களாக சிறுநீரகவியல் துறைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். அடிக்கடி கழிவறை பயன்படுத்தும் சூழல் உள்ளது. ஆனால், பயன்படுத்தவே முடியாத அளவில் அதன் நிலை உள்ளது. தண்ணீர் வருவதில்லை; விளக்கு எரிவதில்லை. உணவு குப்பை, மருத்துவ குப்பையும் தேங்கி கிடக்கின்றன. பலமுறை துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, ' என்றார்.
மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணப்பிரியா கூறுகையில், '' பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்ட, பயன்பாட்டில் இல்லாத கழிவறையை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். கழிவறையை முறையாக பயன்படுத்துவதில்லை. உள்ளாடை முதல் நாப்கின் வரை உள்ளேயே போடுவதால் அடைப்பு ஏற்பட்டு பராமரிப்பு பணி சவாலாகிறது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டன. இனி நோயாளிகளுக்கு சிரமம் இருக்காது,'' என்றார்.
மேலும், அவர் கூறுகையில்,'' சிறுநீரகவியல் துறையில், தினசரி 60-70 வெளிநோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதால், அவர்களுக்கான பிரிவு, இரண்டாம் தளத்தில் உருவாக்க முடிவெடுத்துள்ளோம். தற்போது 26 கருவிகள் உள்ளன. புதிதாக 10 கருவிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், சிகிச்சை பெறுவோரின் காத்திருப்பு நேரம் குறையும். வெளிநோயாளிகள் பிரிவிலும், கழிப்பறைகள் இருப்பதால், இப்பிரச்னை மீண்டும் வராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
