/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நிரந்தர விளம்பர பலகைகளே இல்லீங்க! 'பொய் மூட்டை'யை அவிழ்த்து விட்ட அதிகாரி
/
கோவையில் நிரந்தர விளம்பர பலகைகளே இல்லீங்க! 'பொய் மூட்டை'யை அவிழ்த்து விட்ட அதிகாரி
கோவையில் நிரந்தர விளம்பர பலகைகளே இல்லீங்க! 'பொய் மூட்டை'யை அவிழ்த்து விட்ட அதிகாரி
கோவையில் நிரந்தர விளம்பர பலகைகளே இல்லீங்க! 'பொய் மூட்டை'யை அவிழ்த்து விட்ட அதிகாரி
ADDED : டிச 06, 2024 04:59 AM
கோவை : 'கோவையில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ரோடுகளில் நிரந்தர விளம்பர பலகைகள் இல்லை' என, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு தவறான தகவலை பதிவு செய்திருக்கிறார்.
வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகளிலும், சாலைக்கு மிக அருகாமையிலும் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது. கோவை நகரப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான ரோடுகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக, மேம்பாலங்களுக்கு அருகாமையில் உள்ள கட்டடங்களின் மேற்பரப்பில் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. இவை, அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புகின்றன.
அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் இத்தகைய விளம்பர பலகைளை அகற்ற, மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர், ஆக., 16ல் உத்தரவிட்டிருக்கிறார். மூன்றரை மாதங்களாகியும் கோவை கோட்டத்தை சேர்ந்த மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், விளம்பர பலகைகளை அகற்றாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.
விளம்பர பலகைகள் வைக்க யாருக்காவது நெடுஞ்சாலைத்துறையில் இருந்து தடையின்மை சான்று (என்.ஓ.சி.,) வழங்கப்பட்டு இருக்கிறதா என, 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கதிர்மதியோன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டிருக்கிறார். அதற்கு, 'யாருக்கும் தடையின்மை சான்று வழங்கவில்லை' என, கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி பதிலளித்திருக்கிறார்.
மேலும், 'விளம்பர பலகைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டால், உடனடியாக அகற்றப்படும். இன்றைய தேதி வரை நிரந்தர விளம்பர பலகைகள் இல்லை' என, தவறான தகவலை, ஞானமூர்த்தி கொடுத்திருக்கிறார்.
கோவை நகர்ப்பகுதியில் எந்த ரோட்டில் சென்றாலும் விளம்பர பலகைகள் தென்படுகின்றன. போலீஸ் பூத்தில், அனுமதி பெறாமல் விளம் பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன; விளம்பரம் செய்வதற்கு யாரை அணுக வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோட்டில் அனுமதியின்றி போலீஸ் பூத் வைத்தது தவறு; அதிலும், சட்டத்தை மீறி விளம்பர பலகை வைத்திருப்பது அத்துமீறல். கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டும் கூட, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவற்றை அகற்றாமல் வேடிக்கை பார்ப்பது, அலட்சியத்தின் உச்சமாக இருக்கிறது.