/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் படகு இல்லம், தாவரவில் பூங்கா... இருக்கு... ஆனா, இல்லை! பராமரிப்பின்றி காட்சிப்பொருளானதால் அதிருப்தி
/
வால்பாறையில் படகு இல்லம், தாவரவில் பூங்கா... இருக்கு... ஆனா, இல்லை! பராமரிப்பின்றி காட்சிப்பொருளானதால் அதிருப்தி
வால்பாறையில் படகு இல்லம், தாவரவில் பூங்கா... இருக்கு... ஆனா, இல்லை! பராமரிப்பின்றி காட்சிப்பொருளானதால் அதிருப்தி
வால்பாறையில் படகு இல்லம், தாவரவில் பூங்கா... இருக்கு... ஆனா, இல்லை! பராமரிப்பின்றி காட்சிப்பொருளானதால் அதிருப்தி
ADDED : அக் 08, 2025 11:13 PM

வால்பாறை; வால்பாறை நகராட்சியில் சுற்றுலா பயணியர் பொழுதுபோக்கு வசதிக்காக 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட படகு இல்லமும், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவும் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதனால், வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். கோவை மாவட்டத்தில் சுற்றுலா பயணியர் மனதை கவர்ந்த பகுதியாக வால்பாறை உள்ளது.
அடர்ந்த வனப்பகுதி, தேயிலை எஸ்டேட்கள், அருவி, ஆறு, அழகிய மலைத்தொடர்கள் என, இயற்கை பொக்கிஷங்கள் ஏராளமாக உள்ளன.
அதனால், தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலையடுத்து சமீப காலமாக வால்பாறைக்கு தான் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அட்டகட்டியில் வனத்துறை ஆர்கிட்டோரியம், கவர்க்கல் பகுதியில் தலநார் காட்சிமுனை, நல்லமுடிகாட்சி முனை, சின்னக்கல்லார் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணியர் செல்கின்றனர்.
வால்பாறையில் பொழுதுபோக்கு வசதிக்காக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகுஇல்லமும், 5 கோடி மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட்டன. பணி நிறைவடையாத நிலையில் அவசரக்கோலத்தில் இவை இரண்டும் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன.
அதன்பின், தி.மு.க., ஆட்சி அமைத்ததும், படகு இல்லம், தாவர வியல் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.
மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பின் இவை இரண்டும் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டன. ஆனால், இன்று வரை தாவரவியல் பூங்காவிலும், படகுஇல்லத்திலும் எவ்வித அடிப்படை வசதியும் நகராட்சி சார்பில் ஏற்படுத்தவில் லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வால்பாறை வந்த சுற்றுலா பயணியர் படகுசவாரி செய்தும், பூங்காவை கண்டு ரசித்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக, படகுஇல்லத்தில் கழிவு நீர் கலப்பதால் துார்வாரும் பணி நடப்பதாக கூறி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பணி நிறைவடைந்த நிலையிலும் படகுசவாரி பயன்பாட்டிற்கு வரவில்லை.
தாவரவியல் பூங்காவை சுற்றிலும் புதர்கள் மண்டிக்கிடப்பதால், உள்ளே செல்ல சுற்றுலா பயணியர் அச்சப்படுகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தாவரவில் பூங்கா மற்றும் படகுஇல்லம், பராமரிப்பு இன்றி உள்ளதாலும், மக்கள் வரிப்பணம் வீணாவதாலும், சுற்றுலா பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்காக எவ்வித வளர்ச்சிப்பணியும் முறையாக நடப்பதில்லை. நகராட்சியில் உள்ள எந்த ஒரு வார்டிலும் கடந்த ஆறு மாதங்களாக வளர்ச்சிப்பணிகள் நடைபெறவில்லை.
திட்டங்கள் அறிவிப்பதோடு சரி, அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை. வால்பாறையில் சுற்றுலா மேம்பட்டால் தான், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். படகு இல்லம், தாவரவியல் பூங்காவை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.