/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆத்துப்பாலம் சந்திப்பில் விபத்து ஏற்பட வாய்ப்பு :பழைய பாலத்தை அகலப்படுத்த எதிர்பார்ப்பு
/
ஆத்துப்பாலம் சந்திப்பில் விபத்து ஏற்பட வாய்ப்பு :பழைய பாலத்தை அகலப்படுத்த எதிர்பார்ப்பு
ஆத்துப்பாலம் சந்திப்பில் விபத்து ஏற்பட வாய்ப்பு :பழைய பாலத்தை அகலப்படுத்த எதிர்பார்ப்பு
ஆத்துப்பாலம் சந்திப்பில் விபத்து ஏற்பட வாய்ப்பு :பழைய பாலத்தை அகலப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மார் 08, 2024 01:19 AM

கோவை;உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி, வாகனங்களில் செல்வோர் வசதிக்காக, ஆத்துப்பாலம் சந்திப்பில் உள்ள பழைய பாலத்தை அகலப்படுத்த வேண்டும்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி படுவீச்சில் நடந்து வருகிறது. பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன. விடுபட்ட இடங்களில் மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. மேம்பாலத்துக்கு வெள்ளை நிற பெயின்ட் பூசப்படுகிறது. மேலும், ஆத்துப்பாலம், கரும்புக்கடையில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று இருந்த இடங்களில் ரோடு போடப்பட்டிருக்கிறது.
ஆத்துப்பாலம் சந்திப்பில் இரண்டு பழைய பாலங்கள் உள்ளன. அவற்றில் இடது, வலது என இரு புறமும் பாதசாரிகள் செல்ல நடைபாதை இருக்கிறது. மொத்தம் நான்கு இடங்களில் நடைபாதை உள்ளது. இதில், இடதுபுறத்தில் மட்டும் நடைபாதை அமைத்து விட்டு, மையப்பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு உள்ள தளத்தை அகற்றி, 9 மீட்டர் அகலத்துக்கு ஒரே பாலம் போல், விசாலமாக மாற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
உக்கடத்தில் இருந்து மேம்பாலத்தில் வாகனத்தில் வருவோர், பொள்ளாச்சி ரோட்டுக்கு திரும்புவதற்காக, ஆத்துப்பாலம் சந்திப்பில், நொய்யல் ஆற்றுக்குள் மூன்று துாண்கள் அமைத்து, இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு துாண்கள் அமைத்துள்ள பகுதிக்கும் பழைய பாலத்தின் கைப்பிடிச்சுவர் உள்ள பகுதிக்கும் இடையே இடைவெளி இருக்கிறது.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி, தரைமார்க்கமாக வாகனங்களில் வருவோர், சற்று கவனம் தவறினால், நொய்யல் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்படும் வகையில் இருக்கிறது. அதனால், நொய்யல் ஆற்றுக்குள் புதிதாக அமைத்துள்ள துாண்களை தொட்டவாறு, பழைய பாலத்தை அகலப்படுத்தினால், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உக்கடத்தில் இருந்து வருவோர், பொள்ளாச்சி ரோட்டுக்கு சிரமமின்றி திரும்பிச் செல்வர்.
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்னா வெங்கடேஷிடம் கேட்டதற்கு, ''மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. தரைமார்க்கமாக ஆறு வழிச்சாலை இருக்கிறது. மொத்தமாக, 10 வழிச்சாலை அமையும். அந்தளவுக்கு வாகனங்கள் ஆத்துப்பாலத்தை கடக்காது. ஆத்துப்பாலம் சந்திப்பில், 'ரவுண்டானா' அமைக்கப்படும். போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் சுற்றிச் செல்லலாம்,'' என்றார்.

