/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே இடத்தில் மூன்று தொட்டி கட்டியும் குடிநீருக்கு பற்றாக்குறை
/
ஒரே இடத்தில் மூன்று தொட்டி கட்டியும் குடிநீருக்கு பற்றாக்குறை
ஒரே இடத்தில் மூன்று தொட்டி கட்டியும் குடிநீருக்கு பற்றாக்குறை
ஒரே இடத்தில் மூன்று தொட்டி கட்டியும் குடிநீருக்கு பற்றாக்குறை
ADDED : ஜூலை 20, 2025 10:46 PM

மேட்டுப்பாளையம்,; ஒரே இடத்தில் மூன்று தொட்டி கட்டியும் குடிநீருக்கு பற்றாக்குறை நிலவுவதால், ரேயான் நகர் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சிறுமுகை அருகே ரேயான் நகரில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விஸ்கோஸ் ஆலை இயங்கிய போது, தொழிலாளர்களுக்காக, இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகள் இலுப்பநத்தம் ஊராட்சி எல்லையில் உள்ளது. விஸ்கோஸ் ஆலை நிர்வாகம், கட்டி கொடுத்த பெரிய மேல்நிலைத் தொட்டியும், ஊராட்சி நிர்வாகம் கட்டிய, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியும் உள்ளது. ஆனால், போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து ரேயான் நகர் மக்கள் கூறியதாவது:
இந்த குடியிருப்புகளில் உள்ள, வீடுகளை, ஏ.பி.சி., என மூன்று பிரிவாக பிரித்துள்ளனர்.
இந்த பகுதியில் போதிய அளவு குடிநீர் கிடைக்காததால் லாரி தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இலுப்பநத்தம் ஊராட்சியில், அதிகமான வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை ரேயான் நகரில் தான் வசூல் ஆகிறது. பவானி ஆறு அருகே ஓடியும் எங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இலுப்பநத்தம் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, நில மட்ட தொட்டியை கட்டியது. அதில் இருந்து தண்ணீரை எடுத்து, மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி குடியிருப்புகளுக்கு வழங்கி வருகிறது. இருந்த போதும் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் பலமுறை கூறினோம். ஆனால் அவர்கள் குடிநீர் பிரச்னையை சரி செய்யவில்லை. தற்போது ஊராட்சி தனி அலுவலர் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ரேயான் நகர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.