குழந்தைகளின் ஐ.க்யூ. மதிப்பிடும் மையத்தில் இப்படியும் ஒரு சிக்கல்
குழந்தைகளின் ஐ.க்யூ. மதிப்பிடும் மையத்தில் இப்படியும் ஒரு சிக்கல்
ADDED : ஆக 27, 2026 06:21 PM
கோவை: அரசு மருத்துவமனையில் உள்ள ஆரம்ப இடையீட்டு பயிற்சி மையத்தில், பேசும் திறன், மன வளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம் ஆகிய பாதிப்புகளுக்கு, குழந்தையின் மனநிலை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களின் கற்கும் திறனை மதிப்பிட, ஒரு உளவியல் நிபுணரே உள்ளார்.
குழந்தையின் திறனை மதிப்பிட பிரத்யேக விதிகளை அரசு உருவாக்கியுள்ளது. அதில் லிஸ்ட் போட்டுள்ள திறன்களில், குழந்தையின் நிலையை குறிப்பிட வேண்டும். பல முறை குழந்தைகளை பரிசோதிக்க வேண்டும். அதன் அடிப்படையில் குழந்தையின் கற்கும், உள்வாங்கும் திறன் மதிப்பிடப்படும். அதற்கேற்ப ஆக்குபேஷனல் தெரபி வழங்கி, குழந்தையின் குறை சரிசெய்யப்படும்.
பொதுத்தேர்வுக்கு ‘ஸ்க்ரைப்’ கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை மதிப்பிடவும் இந்த மையத்துக்கு அனுப்புகின்றனர். அங்குள்ள ஒரே நிபுணர் மாணவனை சோதித்தால், வழக்கமான சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் காத்திருக்க நேர்கிறது. அநேகமாக இது தினமும் நடப்பதால், சிகிச்சைக்காக குழந்தைகள் மாத கணக்கில் கூட காத்திருக்க நேர்கிறது.
”இதனால், மையத்தில் கூடுதலாக நிபுணர் நியமிக்க வேண்டும்; ஸ்கிரைப் கேட்கும் மாணவர்களுக்கு வேறு இடத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்” என டாக்டர்கள் சொல்கின்றனர்.
ஜூலை வரை இந்த ஆண்டில் 900 பேருக்கு, கற்றல் குறைபாடுக்கான கவுன்சிலிங் அளித்து, திறன் மதிப்பிட்டுள்ளனர். அதில், ஸ்கிரைப் கேட்டு விண்ணப்பித்தவர்களே அதிகம். இன்று புதிதாக ஒரு குழந்தையின் ஐ.க்யூ. மதிப்பிட பதிவு செய்தாலும், 2 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி 250 பேருக்கு மேல் தற்போது வெயிட்டிங் லிஸ்டில் உள்ளனர்.
