/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விண்ணப்பிக்க தாமதம் இருக்கையும் இல்லை! இ-சேவை மையத்தில் மக்கள் பாதிப்பு
/
விண்ணப்பிக்க தாமதம் இருக்கையும் இல்லை! இ-சேவை மையத்தில் மக்கள் பாதிப்பு
விண்ணப்பிக்க தாமதம் இருக்கையும் இல்லை! இ-சேவை மையத்தில் மக்கள் பாதிப்பு
விண்ணப்பிக்க தாமதம் இருக்கையும் இல்லை! இ-சேவை மையத்தில் மக்கள் பாதிப்பு
ADDED : மே 06, 2025 11:26 PM

மடத்துக்குளம்:இ-சேவை மையத்தில், கூடுதல் கம்ப்யூட்டர் மற்றும் இருக்கை உள்ளிட்ட வசதிகளை அதிகரித்து, நீண்ட நேர காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க, மடத்துக்குளம் தாலுகா மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை தாலுகாவில் இருந்து, இரு உள்வட்டங்களை உள்ளடக்கி மடத்துக்குளம் தாலுகா உருவாக்கப்பட்டது. துங்காவி மற்றும் மடத்துக்குளம் வருவாய் உள்வட்டத்தில், 20க்கும் அதிகமான வருவாய் கிராமங்கள் உள்ளன.
இக்கிராம மக்கள் அரசின் பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க, இ-சேவை மையங்களை மட்டுமே நம்பியுள்ளனர். இத்தாலுகா மக்கள் வசதிக்காக, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு ஆதார் அடையாள அட்டை பெறவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும், இதர பணிகளுக்காகவும், நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், மையத்தில் போதிய வசதியில்லாததால் மக்கள் பாதிக்கின்றனர்.
இ-சேவை மையத்தில் கூடுதல் கம்ப்யூட்டர் இல்லாததால், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பதிவிட நீண்ட நேரமாகிறது. இதனால், பிற மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு காத்திருக்க போதிய இருக்கை வசதியில்லை.
மக்கள் அலுவலகம் முன்புள்ள மரத்தடியில் காத்திருக்க வேண்டியுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பல்வேறு சான்றிதழ்களுக்காக இ-சேவை மையத்துக்கு வந்து செல்கின்றனர்.
எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மடத்துக்குளம் தாலுகா அலுவலக இ-சேவை மையத்துக்கு கூடுதல் கம்ப்யூட்டர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; மக்களுக்கு தேவையான இருக்கை வசதி செய்து, சிரமத்தை தவிர்க்க வேண்டும் என மடத்துக்குளம் தாலுகா மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.