/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை; நோயாளிகள் தவிப்பு
/
சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை; நோயாளிகள் தவிப்பு
சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை; நோயாளிகள் தவிப்பு
சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை; நோயாளிகள் தவிப்பு
ADDED : நவ 12, 2024 05:28 AM

வால்பாறை ; வால்பாறை சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
டாக்டர் இல்லாததால், அங்கு பணிபுரியும் நர்சுகளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள் இல்லாததால், வால்பாறை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து, பின் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, வட்டார மருத்துவ அலுவலர், நர்ஸ் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக குழந்தைகள் பிறப்பு அதிகமாக உள்ளதால், பெண் மகப்பேறு மருத்துவர் உடனடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அரசு ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மட்டுமே, டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. மாற்றுப்பணி (டெபுடேசன்) அடிப்படையில் வாரத்தில் நான்கு நாட்கள் டாக்டர்கள் வந்து செல்கின்றனர். விரைவில் நிரந்தரமாக வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் டாக்டர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இங்கு ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஆனால் அதற்கான டெக்னீசியன் இல்லாததால், கடந்த பல ஆண்டுகளாக இவை காட்சிப்பொருளாகவே உள்ளன. இதனால் அங்கு வரும் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வசதிகள் இருந்தும் பணியாளர் பற்றாக்குறையால், பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.