/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீட்' தேர்வுக்கு முறையான பயிற்சி இல்லை; தலைமையாசிரியர்களே வருத்தம்
/
'நீட்' தேர்வுக்கு முறையான பயிற்சி இல்லை; தலைமையாசிரியர்களே வருத்தம்
'நீட்' தேர்வுக்கு முறையான பயிற்சி இல்லை; தலைமையாசிரியர்களே வருத்தம்
'நீட்' தேர்வுக்கு முறையான பயிற்சி இல்லை; தலைமையாசிரியர்களே வருத்தம்
ADDED : ஏப் 03, 2025 11:45 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என, பள்ளித் தலைமையாசிரியர்களே வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த இரு ஆண்டுகளாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களில், ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பம் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
அதன்படி, தலைமையாசிரியர் தலைமையில், ஒவ்வொரு பாட ஆசியர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள், மாணவர்களிடையே நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சியும் அளித்தனர்.
குறிப்பாக, நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அதன்வாயிலாக, பலரின் கனவு, நனவானது. ஆனால், நடப்பாண்டு, அரசு பள்ளிகளில் நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளுக்கு முறையாக பயிற்சி வகுப்பு நடத்தவில்லை. சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்களே நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்களிடையே, நீட், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வு குறித்து விழிப்புணர்வு கிடையாது. மாறாக, பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மாணவர்கள் சிலர், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.
காரணம் என்னவென்றால், பெரும்பாலான பள்ளிகளில் நீட், ஜே.இ.இ., தேர்வு குறித்து, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்படவில்லை. அதேபால, நுழைவுத்தேர்வுக்கு கட்டணமாக, 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்கள், விண்ணப்பிப்பதை தவிர்க்கின்றனர்.
இதனை, 300 ரூபாய்க்கு குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது, பெற்றோர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், ஆசிரியர்களே அதற்கான கட்டணத்தை செலுத்த முன்வருவர்.
மேலும், ஒன்றிய அளவில், நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல, தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.