/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாப்பில் இடமில்லை; ரோட்டில் நிற்கும் மக்கள்
/
பஸ் ஸ்டாப்பில் இடமில்லை; ரோட்டில் நிற்கும் மக்கள்
ADDED : ஆக 15, 2025 08:47 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், இடவசதி இல்லாததால் மக்கள் ரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், தினமும், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள் இருப்பதால், ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டோரம் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது.
இதில், மலைக்கோவில் பஸ் ஸ்டாப் (பொள்ளாச்சி வழி) பகுதியில் மக்கள் நிற்கும் இடத்தில் அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், கொண்டம்பட்டி செல்லும் ரோட்டின் ஒரு பகுதியை மறித்து மக்கள் நிற்கின்றனர். இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
சிறிது நேரம் நெரிசல் ஏற்பட்டாலும், இயல்பு நிலை திரும்ப அரை மணி நேரமாகிறது. இதை தவிர்க்க பஸ் ஸ்டாப் முன்பாக வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யாமல் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

