/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிர் காக்கும் சுகாதார நிலையங்களில் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது!
/
உயிர் காக்கும் சுகாதார நிலையங்களில் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது!
உயிர் காக்கும் சுகாதார நிலையங்களில் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது!
உயிர் காக்கும் சுகாதார நிலையங்களில் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது!
ADDED : செப் 18, 2024 10:49 PM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான துணை சுகாதார நிலையங்கள், சிதிலமடைந்து பாதுகாப்பாற்ற நிலையில் உள்ள கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 10 ஊராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளும் உள்ளன. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு அரசு பொது மருத்துவமனையும், 5 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 19 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், பூலுவபட்டியில் உள்ள வட்டார மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதி உள்ளதால், அந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை, அவ்வப்போது புனரமைத்து வருகின்றனர்.
ஆனால், மக்கள், மருத்துவ சிகிச்சைக்காக வெகு தூரம் செல்வதை தவிர்க்க அமைக்கப்பட்ட, 19 துணை சுகாதார நிலையங்களும் சிதலமடைந்த கட்டடங்களில் செயல்படுகின்றன.
சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழும் நிலையில் மின் இணைப்பு கம்பிகள் என, பாதுகாப்பற்ற நிலையில் கட்டடங்கள் உள்ளன.
ஒரு சில இடங்களில், துணை சுகாதார நிலைய கட்டடம், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அருகிலுள்ள ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான கட்டடங்களிலும், வாடகை கட்டடங்களிலும், துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டடங்களை புதுப்பிக்கவும், இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார நிலைய கட்டடங்களை இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.