/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை; ஐந்து கிராம மக்கள் வேதனை
/
குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை; ஐந்து கிராம மக்கள் வேதனை
குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை; ஐந்து கிராம மக்கள் வேதனை
குளத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை; ஐந்து கிராம மக்கள் வேதனை
ADDED : ஜன 29, 2024 11:18 PM

அன்னுார்;''அல்லப்பாளையம் ஊராட்சியில், குளங்களில், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை,'' என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அன்னுார் ஒன்றியத்தில் கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம் ஊராட்சிகளில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. வாழை, மஞ்சள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவை பல ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஊராட்சியில் உள்ள மூன்று குளங்களிலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அல்லப்பாளையம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், முன்னோடி விவசாயிகள் சவுந்தரராஜன், செல்வராஜ் உள்ளிட்டோர் கூறியதாவது :
கஞ்சப்பள்ளி மற்றும் அல்லப்பாளையம் ஊராட்சிக்கு இடையே, 40 ஏக்கர் பரப்பளவில் தொட்டையன் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து அதிக அளவில் மழை நீர் வருவது வழக்கம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல், குளம் வறண்டு போய், மைதானம் போல் காட்சியளிக்கிறது. ஆனால் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அன்னுார் வட்டாரத்தில் ஓரளவு மழை பெய்தது. 119 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னுார் குளத்தில், 60 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள கஞ்சப்பள்ளி குளம் நிரம்பி, ஒரு மாதமாக நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் எங்கள் குளத்தில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. அல்லப்பாளையம், ருத்திரியம் பாளையம், மத்திரெட்டிபாளையம், கஞ்சப்பள்ளியின் வடக்கு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு திட்டத்தில் மூன்று முறை மட்டுமே இந்த குளத்திற்கு சோதனை ஓட்டத்தில் நீர் விடப்பட்டுள்ளது.
அன்னுார் குளத்தில், 35 முறையும், குன்னத்துாராம்பாளையத்தில் 50க்கும் மேற்பட்ட முறையும் நீர் விடப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய சோதனையோட்டம் 11 மாதங்கள் முடிந்தும் மூன்று முறை மட்டுமே இங்கு தண்ணீர் விட்டுள்ளனர்.
இந்த குளத்திற்கு மழை நீர் செல்லும் பள்ளங்களை துார்வாரவில்லை. குப்பை, மண்மேடு, ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் மழை பெய்தும், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது. அதிகாரிகள் இந்தக் குளத்துக்கு மழை நீர் வரும் பாதையில் உள்ள மண்மேடு, புதர்கள், குப்பைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.
மேலும் அத்திக்கடவு திட்டத்தில் இந்த குளத்திற்கு கூடுதலாக நீர் விட வேண்டும், இதே ஊராட்சியில் மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ள தட்டான் குட்டை மற்றும் இரண்டு ஏக்கர் உள்ள கர்ணம் குட்டை ஆகிய குட்டைகள் அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. விரைவில் சேர்க்க வேண்டும்.
இந்த குளங்களுக்கு மழை நீர் வரும் பாதையை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்போது அதிக அளவில் விவசாயம் செய்து வரும் இந்த பகுதி தரிசு நிலமாக மாறும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.