/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவோர் ஒரு சதவீதம் கூட இல்லை! விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு
/
தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவோர் ஒரு சதவீதம் கூட இல்லை! விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு
தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவோர் ஒரு சதவீதம் கூட இல்லை! விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு
தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் சேருவோர் ஒரு சதவீதம் கூட இல்லை! விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு
ADDED : பிப் 19, 2025 10:18 PM

சூலுார்; போதிய விழிப்புணர்வு இல்லாததால் தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு சதவீத விவசாயிகள் கூட இணையவில்லை. இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தின் வாயிலாக, தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசின் பங்களிப்புடன் தென்னை பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும். பேரிடர்களினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளை மறு நடவுக்கு ஊக்குவித்து, சாகுபடியை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.
சூலுார் வட்டாரத்தில், 8 ஆயிரம் எக்டரில் தென்னை சாகுபடியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 9 ஆயிரம் எக்டரில், ஆயிரத்து, 500க்கும் அதிகமான விவசாயிகள் தென்னை விவசாயம் செய்கின்றனர். இதில், பிரிமீயம் குறைவாக இருந்தும் தென்னை மரங்களை காப்பீடு செய்யும் திட்டத்தில் ஒரு சதவீத விவசாயிகள் கூட இணையவில்லை. இரு வட்டாரங்களில் பேரிடர் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை. ஆனால், நோய் தாக்குதல் அதிகளவில் உள்ளது. அதனால், தென்னைகள் பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். காப்பீடு செய்திருந்தால் மரங்களுக்கான இழப்பீடு கிடைக்கும் என்பதை அதிகாரிகள், விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, காப்பீடு செய்ய விவசாயிகள் முன் வருவார்கள் என்பதே உண்மை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுக்கு, 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய அனைத்து மரங்களையும் காப்பீடு செய்யலாம். குறைந்த பட்சமாக, ஐந்து தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்யலாம். நான்கு முதல், 60 வயதுடைய குட்டை மற்றும் கலப்பின ரகம், ஏழு முதல், 60 வயதுடைய நெட்டை ரக மரங்களை காப்பீடு செய்யலாம்.
இயற்கை பேரிடர் மற்றும் நோய் தாக்குதலால் ஈடு செய்ய முடியாத பாதிப்பு உண்டாகும் போதும், தீ விபத்து, மின்னல் தாக்குதல், வறட்சி உள்ளிட்டவைகளால் மரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டை இத்திட்டத்தின் கீழ் பெறலாம்.
நான்கு முதல், 15 வயதுடைய மரங்களுக்கு காப்பீடு தொகை, 900 ரூபாய் ஆகும். முழு பிரிமீயத்தொகை, ஒன்பது ரூபாய் ஆகும். 16 வயது முதல், 60 வயது வரை உள்ள மரங்களுக்கு, காப்பீடு தொகை, ஆயிரத்து, 750 ரூபாய். முழு பிரிமீயத்தொகை, 14 ரூபாய் ஆகும்.
முன்மொழிவு படிவம், ஆதார் நகல், நில பதிவேட்டின் சான்று, பட்டா, சிட்டா, மரங்களின் எண்ணிக்கை, அடங்கல் ஆவணம், கள அளவீட்டு புத்தகம், ஆகிய ஆவணங்களை கொடுத்து திட்டத்தில் சேரலாம். வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி, படிவங்கள், பிரிமியத்தொகைக்கான டி.டி., ஆகியவற்றை கொடுத்து திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

