/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 நாளில் பதில் தருவோம்னு சொன்னாங்க; ஆனா, தரலீங்க! தகவல் அறியும் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாநகராட்சி
/
10 நாளில் பதில் தருவோம்னு சொன்னாங்க; ஆனா, தரலீங்க! தகவல் அறியும் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாநகராட்சி
10 நாளில் பதில் தருவோம்னு சொன்னாங்க; ஆனா, தரலீங்க! தகவல் அறியும் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாநகராட்சி
10 நாளில் பதில் தருவோம்னு சொன்னாங்க; ஆனா, தரலீங்க! தகவல் அறியும் சட்டத்தை உதாசீனப்படுத்தும் மாநகராட்சி
ADDED : நவ 29, 2024 11:48 PM
கோவை: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, கோவை மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்காமல், மனுக்களை கிடப்பில் போடுகின்றனர்.
அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்கிறது என்பதை காட்டும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களுக்கு அரசு அலுவலகங்களில் இருந்து முறையாக குறிப்பிட்ட நாட்களுக்குள் பதில் அனுப்பப்பட்டு வந்தது. சமீபகாலமாக, கோவை மாநகராட்சியில் அத்தகைய மனுக்கள் கிடப்பில் போடப்படுகின்றன. மேல்முறையீடு செய்தாலும் தகவல் அளிப்பதில்லை.
கடந்த ஏப்., மாதம், வெள்ளலுார் குப்பை கிடங்கில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்கு, 76.70 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கணக்கு காட்டியது. அதில், 11 நாட்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் உணவு, டீ, காபி, குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் வாங்கியதற்காக, 27 லட்சத்து, 51 ஆயிரத்து, 678 ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. இவற்றின் ரசீது நகல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சமூக ஆர்வலர் தியாகராஜன் கோரியிருந்தார்.
அதற்கு, 'தீயை அணைப்பதற்கு செலவிட்ட தொகைக்கான ரசீதுகள் அனைத்தும் ஆய்வுக்காக, டவுன்ஹாலில் உள்ள பிரதான அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிந்ததும் ரசீது நகல் வழங்கப்படும்' என, ஆக., 29ல், தெற்கு மண்டல பொது தகவல் அலுவலர் தெரிவித்திருந்தார். அதன்பின், மேல்முறையீடு அலுவலரான, துணை கமிஷனருக்கு அக்., 2ல் ரசீது நகல் கேட்டு மீண்டும் விண்ணப்பித்தார். அதற்கு, நவ., 4ல், தெற்கு மண்டல உதவி கமிஷனரிடம் இருந்து பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், 'வெள்ளலுார் குப்பை கிடங்கில் ஏப்., மாதம் நடந்த தீ விபத்தில், தீயை அணைக்க செய்த செலவு தொகையின் பில் ரசீது நகல்கள், சட்டப்பிரிவு 19(6)ன் கீழ் இன்னும், 10 நாட்களுக்குள் கட்டணம் ஏதுமின்றி, அனுப்பப்படும்' என, கூறியிருந்தார்.
இதன்படி, மனுதாரருக்கு, 14ம் தேதிக்குள் தகவல் அனுப்பியிருக்க வேண்டும். அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் அனுப்பவில்லை. இன்றுடன் நவ., மாதமே முடிந்து விட்டது. விண்ணப்பத்துக்கும் பதில் அளிக்கவில்லை; மேல்முறையீடு மனுவையும் துணை கமிஷனர் உதாசீனப்படுத்தியிருக்கிறார்.
இதேபோல், 'கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்' செயலாளர் கதிர்மதியோன், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட தகவல்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தராத காரணத்தால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கும் தகவல்களை கண்டிப்பாக தர வேண்டும்; அலுவலர்களை கொடுக்கச் சொல்கிறேன். 'கொடுக்கக்கூடாது' என்கிற வகையில் உள்ள தகவல்களை கொடுக்காமல் இருக்கிறார்களா அல்லது கொடுக்க வேண்டிய தகவல்களை கொடுக்காமல் இருக்கிறார்களா என விசாரிக்கிறேன்,'' என்றார்.