மாதத்திற்கு ஒரு முறை வரும் குடிநீரால்...தாகம்! விலைக்கு வாங்கி சமாளிக்கும் அவலம்
மாதத்திற்கு ஒரு முறை வரும் குடிநீரால்...தாகம்! விலைக்கு வாங்கி சமாளிக்கும் அவலம்
UPDATED : செப் 28, 2026 04:37 AM
ADDED : செப் 27, 2026 05:31 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில், மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை குடிநீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பால் மக்கள் பாதித்து கண்ணீர் விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில், 85 கிராமங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதிக்கு, அம்பராம்பாளையம் மற்றும் சூளேஸ்வரன்பட்டி என, இரண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் இன்று வரை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.சில சமயங்களில் நிர்வாக காரணங்களினால் வழங்கும் குடிநீரின் அளவு குறைகிறது. நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு, 55 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் இந்த அளவில் குடிநீர் வருவதில்லை.
ஒரு சில கிராமங்களில், கடந்த சில ஆண்டுகளாக கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகமே இல்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் சாதாரண தண்ணீரையே குடிக்கும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது பருவமழை இல்லாததால், பல கிராமங்களில் போர்வெல் மற்றும் பொது கிணறுகளில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.
குறிப்பாக பனப்பட்டி, வடசித்தூர், செங்குட்டைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாரம் ஒரு முறை, 2 மணி நேரம் வழங்கப்பட்ட சாதாரண தண்ணீர், மாதம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ அதுவும், 1 மணி நேரம் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது : பருவ மழை இல்லாததால் ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. புதிதாக, ஆயிரம் அடியில் போர்வெல் அமைத்தும் தண்ணீர் இல்லை.
இதனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட, 30 போர்வெல்கள் தேர்வு செய்து அதை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் இப்பணிகள் விரைவில் துவங்கப்படும். மேலும், குடிநீர் வடிகால் வாரியத்திலும் கூடுதலாக தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.
