/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டம் இரு தாலுகாவில் வினியோகத்தில் சிக்கல்
/
திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டம் இரு தாலுகாவில் வினியோகத்தில் சிக்கல்
திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டம் இரு தாலுகாவில் வினியோகத்தில் சிக்கல்
திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட தொழிலாளர்கள் திடீர் போராட்டம் இரு தாலுகாவில் வினியோகத்தில் சிக்கல்
ADDED : அக் 30, 2024 08:37 PM

உடுமலை; கூட்டுக்குடிநீர் திட்ட பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு, மடத்துக்குளம் கூட்டு குடிநீர் திட்டம், குடிமங்கலம் கூட்டுக்குடிநீர் திட்டம், கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், புதிய மடத்துக்குளம் கூட்டுக்குடிநீர் திட்டம், பூலாங்கிணர் குடிநீர் திட்டம் ஆகியவை, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
தினமும், 32 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகளிலுள்ள நுாற்றுக்கணக்கான கிராம குடியிருப்புகள் மற்றும் தளி, மடத்துக்குளம், கணியூர், கொமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சி பகுதிகளுக்கு, இத்திட்டங்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஏறத்தாழ, 5 லட்சம் மக்கள் பயன்பெறும், இக்குடிநீர் திட்டங்களின் இயக்கம் மற்றும் ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வினியோக பணிகள், வாரியம் சார்பில், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய தற்காலிக பணியாளர்கள், 60க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரி, நேற்று காலை, 10:00 மணி முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இரு தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, குடிநீர் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, குடிநீர் வினியோக பணியை சீரமைக்க வேண்டும், என ஊராட்சித்தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: தனியார் நிறுவனம் சார்பில் மாதம், 12 ஆயிரத்து, 600 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த, 2018 முதல், ஏழு ஆண்டாக ஊதியம் உயர்த்தவில்லை. அதே போல், தீபாவளி போனஸ், 1,300 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தனர்.
மற்ற மாவட்டங்களில் கூடுதல் ஊதியம், போனஸ் வழங்கப்படும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், குறைந்தளவு வழங்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியம், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத்தை மீறி செயல்படும் தனியார் ஒப்பந்த நிறுவனம் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்கினால் மட்டுமே மீண்டும் பணிக்கு திரும்புவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.