/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வினாத்தாள் இல்லாததால் காலாண்டு தேர்வு நடத்த முடியாமல் 'திருதிரு'
/
வினாத்தாள் இல்லாததால் காலாண்டு தேர்வு நடத்த முடியாமல் 'திருதிரு'
வினாத்தாள் இல்லாததால் காலாண்டு தேர்வு நடத்த முடியாமல் 'திருதிரு'
வினாத்தாள் இல்லாததால் காலாண்டு தேர்வு நடத்த முடியாமல் 'திருதிரு'
ADDED : செப் 16, 2025 11:06 PM

கோவை; கோவையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு தமிழ் பாட வினாத்தாள், எமிஸ் தளத்தில் வெளியிடப்படாததால், தேர்வு தாமதமாக தொடங்கியது. சில இடங்களில் மாணவர்களுக்கு இருமுறை தேர்வு நடத்த வேண்டிய நிலை உருவானது.
6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு, நேற்று முன் தினம் துவங்கியது. வரும் 26 வரை நடக்கிறது.
மெல்லக் கற்கும் மாணவர்களின் அடிப்படை மொழித் திறன் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்த, கடந்த ஆகஸ்ட் முழுவதும் 'திறன்' திட்டத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
இவர்களுக்கான காலாண் டுத் தேர்வுக்கு, 'திறன்' புத்தகத்திலிருந்து வினாத்தாள்கள் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை முன்கூட்டியே அறிவித்திருந்தது.
புத்தகமின்றி, வினாத்தாளின்றி ஆனால் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு, இதுவரை திறன் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. தமிழ் பாட வினாத்தாள் எமிஸ் தளத்தில் வெளியாகாததால், ஆசிரியர்கள் அரசு பள்ளிகளிடமிருந்து வினாத்தாள்களை வாட்ஸ்அப் வாயிலாக பெற்று, பிரிண்ட் எடுத்து காலை 11 மணிக்குப் பிறகே, தேர்வை தொடங்கியதாக தெரிவித்தனர்.
சில பள்ளிகளில், முதலில் ரெகுலர் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் வழங்கி தேர்வு நடத்தப்பட்டு, பின்னர் திறன் வினாத்தாள் கிடைத்ததும் மீண்டும் அந்த மாணவர்களை தேர்வு எழுதச் செய்தனர். சர்வர் டவுன் காரணமாக வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
'அரசு உதவி பெறும் பள்ளிகளையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்'
அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் 15 பகுதிகள் கொண்ட திறன் புத்தகத்திலிருந்து 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கும், 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் 6-9ம் வகுப்பு வரை மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தும் நோக்கில், இந்த பாடங்களுக்கு திறன் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு இதுவரை புத்தகங்கள் வழங்கவில்லை. இதனால், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்ட புத்தகங்களை பிரிண்ட் செய்து, கற்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அரசு கவனிக்க வேண்டும்' என தெரிவித்தனர்.