/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிஞ்சி ஈஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
குறிஞ்சி ஈஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : மே 12, 2025 11:29 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில், குறிஞ்சி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இதில் குறிஞ்சி நாயகி அம்மன் சன்னதி உள்ளது.
இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் இந்திய தேசத்தின் ராணுவ வீரர்களும், அவர்களின் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருக்க விளக்கு பூஜை நடந்தது.
விளக்கு பூஜை தொடங்கியவுடன் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். அதைத் தொடர்ந்து பெண்கள் விளக்கிற்கு பூஜை செய்தனர். நேற்று காலை அணைக்கட்டு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் மற்றும் பால் குடங்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். அம்மன் மற்றும் குறிஞ்சீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சித்ரா பவுர்ணமி உச்சிக்கால பூஜை செய்தனர்.
மாலையில் பக்தர்கள் மாவிளக்கை எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிளக்கு பூஜை, சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.