விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தும் 'வாழை' இது புதுசு... அதிகரிக்குது மவுசு...!வளர்ச்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தும் 'வாழை' இது புதுசு... அதிகரிக்குது மவுசு...!வளர்ச்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
UPDATED : செப் 23, 2026 05:51 PM
ADDED : செப் 23, 2026 05:43 PM

மேட்டுப்பாளையம்: திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்த வாழைக்கன்றுகளை, மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதனால், இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. காரமடை அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழுவும், அறம் அங்கக வேளாண் கூட்டுறவு அமைப்பும் இணைந்து, மலைவாழ் மக்கள் மற்றும் மிகவும் பின்தங்கிய விவசாயிகளுக்கு, விவசாயம் சம்பந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் கிடைக்க, விவசாயிகளுக்கு தேவையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு பகுதியாக, மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு, புதிய ரக வாழைக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, சிறுமுகை அருகே கூத்தாமண்டியில் நடந்தது. காரமடை அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழுவின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்து பேசியதாவது:
திருச்சி வாழை மையத்தில், 'ஜீ 9 கிராண்ட் ரோபஸ்டா' என்ற புதிய வாழை ரகம் கண்டுபிடித்துள்ளனர். இந்த கன்றுகள் நடவு செய்த போது, பத்தாவது மாதத்தில் பெரிய தார் அறுவடை செய்துள்ளனர். பழத்தின் ருசியும் அருமையாக இருந்துள்ளது. புதிய வாழை கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய பல இடங்களில் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளனர். இப்பழம் சுவையாக இருந்ததால், வெளிநாடுகளுக்கு வாழைத்தார் ஏற்றுமதி செய்துள்ளனர்.
இந்த ரகத்தை, மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினால், இதன் வாயிலாக இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். அந்த அடிப்படையில் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தோம். திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து, 9,000 வாழைக்கன்றுகள் இலவசமாக பெற்றுள்ளோம். காரமடையில் உள்ள மலைவாழ் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. இந்த கன்றுகளின் வளர்ச்சியை, வாழை ஆராய்ச்சி மையம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, வளர்க்கும் முறைகள் குறித்து வழிமுறைகள் கூறுவர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அறம் அங்கக வேளாண் கூட்டுறவு அமைப்பு நிர்வாகி சதீஸ், இயக்குனர் ரங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு இயக்குனர் வேலுசாமி நன்றி கூறினார்.
