/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெள்ளாதி ஊராட்சியில் இந்த அவல நிலை; ஆற்று தண்ணீரை திருப்பி விட கோரிக்கை
/
பெள்ளாதி ஊராட்சியில் இந்த அவல நிலை; ஆற்று தண்ணீரை திருப்பி விட கோரிக்கை
பெள்ளாதி ஊராட்சியில் இந்த அவல நிலை; ஆற்று தண்ணீரை திருப்பி விட கோரிக்கை
பெள்ளாதி ஊராட்சியில் இந்த அவல நிலை; ஆற்று தண்ணீரை திருப்பி விட கோரிக்கை
ADDED : மே 01, 2025 04:38 AM

மேட்டுப்பாளையம்: பெள்ளாதி ஊராட்சியில் வறண்ட நிலையில் உள்ள குட்டைக்கு, ஏழு எருமை பள்ளத்தில் வழிந்து ஓடும் தண்ணீரை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 17 ஊராட்சிகளில் பெள்ளாதி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதில் ஊராட்சியின் மேற்கு பகுதி முழுவதும், லே-அவுட் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் அதிகளவில் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்த ஊராட்சியில், 100 ஏக்கர் பரப்பளவில் பெள்ளாதி குளம் உள்ளது. இந்த குளத்துக்கு காரமடை சுற்றுப்பகுதியில் பெய்யும் மழை நீர் வருவதற்கு பள்ளங்கள் அமைந்துள்ளன. மேலும் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வரும் ஏழு எருமை பள்ளத்தில் வரும் மழைநீர், இந்த பெள்ளாதி குளத்திற்கு வரும் வகையில், வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், பெள்ளாதி குளம் இடம் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு தண்ணீர் பெள்ளாதி குளத்திற்கு வந்தது. பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு காரமடை ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீரும் பெள்ளாதி குளத்திற்கு வந்தது.
இதனால் இக்குளம் நிரம்பி வழிந்தது. ஏழு எருமை பள்ளத்தில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த வெயில் காலத்திலும் பெள்ளாதி குளம் நிரம்பி வழிகிறது. இப்பகுதியில், 18 ஏக்கர் நிலப்பரப்பில் மூங்கில் குட்டை உள்ளது. இந்த குட்டைக்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வரும்.
பள்ளங்களில் வழியாகவும், ஏழு எருமை பள்ளம் வழியாக இந்த குட்டைக்கு தண்ணீர் வர வழி இல்லை. இந்த ஊராட்சியின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் அனைத்தும், மிகவும் செழிப்பாக உள்ளன. கிழக்குப் பகுதி தண்ணீர் இல்லாமல் வறட்சியான நிலையில் உள்ளது.
இது குறித்து பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதி குமரேசன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது :
பெள்ளாதி ஊராட்சியில் எவ்வித தொழிற்சாலைகளும் இல்லை. இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
வாய்க்கால் மற்றும் ஆற்றுப் பாசனம் ஏதும் இல்லை. கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர்.
ஊராட்சி கிழக்குப் பகுதியில் மொங்கம்பாளையத்தில் அமைந்துள்ள, மூங்கில் குட்டை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
சில கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல், ஊராட்சி சார்பில் வழங்கும் குழாய் தண்ணீரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஏழு எருமை பள்ளத்தில் வழிந்து ஓடும் தண்ணீரை, குழாய் வழியாக பம்பிங் செய்து, மூங்கில் குட்டையில் நிரப்ப வேண்டும் என, ஊராட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை அனுப்பப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் நலன் கருதி ஏழு எருமை பள்ளத்தில் வழிந்தோடும் தண்ணீரை, மின்மோட்டார் வாயிலாக மூங்கில் குட்டைக்கு பம்பிங் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அதோடு அதற்கு தேவையான நிதி உதவியும் வழங்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் தலைவர் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.