UPDATED : மே 06, 2026 05:58 PM
ADDED : மே 06, 2026 05:51 PM
மேட்டுப்பாளையம்: காரமடை ரயில்வே ஸ்டேஷனில், பிளாட்பாரம் மற்றும் ரயில் பாதைகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கவுள்ளதால், தோலம்பாளையம் ரயில்வே கேட், நிரந்தரமாக அடைக்கப்பட்டது.
காரமடை நகரில் தோலம்பாளையம் சாலையில், ரயில்வே கேட் உள்ளது. கோவைக்கு தினமும் ரயில்கள் சென்று வருவதால், 12 முறை இந்த ரயில்வே கேட்டை அடைத்து திறந்து வந்தனர். ஆகஸ்ட் மாதம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்பது ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளன. இதற்காக காரமடை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பாதைகள் மற்றும் பிளாட்பாரங்கள் விஸ்தரிப்பு செய்யும் பணிகள் நடக்கின்றன.
ரயில் பாதை விஸ்தரிப்பு, தோலம்பாளையம் ரயில்வே கேட் தாண்டி அமைக்கப்பட உள்ளதால், இந்த ரயில்வே கேட்டை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கேட்டை, ஏப். 29ம் தேதியிலிருந்து நிரந்தரமாக மூட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை கருதி, மே 6ம் தேதி வரை ரயில்வே கேட் திறந்திருக்க முடிவு செய்தது.
(மே 6)ரயில்வே கேட் அடைப்பதை அடுத்து, அங்கு சட்ட ஒழுங்கு ஏதும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் அவ்வழியாக வந்த பொதுமக்களிடம், (மே 6 இரவு), 9:00 மணி வரை மட்டும் கேட் திறந்திருக்கும். (மே 6) முதல் கேட் நிரந்தரமாக அடைத்திருக்கும். இனிவரும் நாட்களில் புதிதாக கட்டிய ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லவும்' என, ரயில்வே ஊழியர்கள், பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
