ADDED : டிச 03, 2024 06:34 AM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நிகழ்ச்சி நடத்த வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, ஒரு வீட்டின் சுற்று சுவர் இடிந்து, அந்த சுற்று சுவரின் அருகில் இருந்த ஓட்டு வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் இறந்தனர். அந்த சுவர் தீண்டாமை காரணமாக கட்டப்பட்டது என பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே இதுதொடர்பாக அப்பகுதியில் நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனிடையே அங்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த தோழர் பேரவை, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் காரமடை வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் போது, அவர்களை காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.