/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்துக்கு மூன்று விருது; சுதந்திர தின விழாவில் கவுரவிப்பு
/
கோவை மாவட்டத்துக்கு மூன்று விருது; சுதந்திர தின விழாவில் கவுரவிப்பு
கோவை மாவட்டத்துக்கு மூன்று விருது; சுதந்திர தின விழாவில் கவுரவிப்பு
கோவை மாவட்டத்துக்கு மூன்று விருது; சுதந்திர தின விழாவில் கவுரவிப்பு
ADDED : ஆக 16, 2024 12:22 AM

கோவை : கோவை மாவட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், சூலுார் பேரூராட்சி ஆகியவற்றின் நிர்வாகத் திறமை மற்றும் மக்களுக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் விதமாக, சுதந்திர தின விழாவில் முத்தாய்ப்பாக மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. இது, கோவைக்கு கிடைத்த கவுரவம், பெருமையாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக வேகமாக வளர்ந்து வரும் நகரம் கோவை. தொழில் துறை வளர்ச்சி மட்டுமின்றி மருத்துவ துறை மற்றும் கல்வித்துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து தேவைகளை எடுத்துச் சொல்லி, அடுத்த கட்ட நகர்வுகளுக்கு கொண்டு செல்கின்றன.
இதற்கு பெரும் பங்காற்றி வருபவர்களில் முக்கியமானவர்கள் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்.
குடிநீர் மேலாண்மை, வரி வசூல், வெள்ள நீர் தடுப்பு, வாய்க்கால் சீரமைப்புக்காக கோவை மாநகராட்சிக்கு முதல் பரிசு, திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் சூலுார் பேரூராட்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
அர்ப்பணிப்பு உணர்வுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியது; தன்னார்வலர்கள் மற்றும் சி.எஸ்.ஆர்., நிதி திரட்டி வீடு கட்டிக் கொடுப்பது; பொருளாதார ரீதியாக அவர்களின் குடும்பத்தை மேம்படுத்துவது; அவர்களுக்காக சிறப்பு பூங்கா ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செய்து வருவதால், தமிழக அளவில் சிறந்த கலெக்டராக கிராந்திகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கான சிறப்பு விருது, கலெக்டர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.
மாநகராட்சி முதலிடம்
கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் கோவை மாநகர மக்கள் பரிதவித்தபோது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தனது அலுவலர்களை அழைத்துக் கொண்டு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அணைக்கு மேல்பகுதியில் உள்ள போத்திமந்து நீர்த்தேக்கத்துக்குச் சென்றார். அப்பர் பவானி அணைக்கு நடந்தே சென்று, மோட்டார் பொருத்தி, பில்லுார் அணைக்கு தண்ணீர் கொண்டு வர பெருமுயற்சி எடுத்தார்.
இதுதவிர, மாநகராட்சியின் வரி வசூலை அதிகரிக்கவும், குப்பையில் காஸ் தயாரிப்பது, குப்பையை தரம் பிரித்து அழிப்பது; நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அவற்றின் தடுப்பு நடவடிக்கை எடுத்தது மற்றும் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால் துார்வாரியது உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரம் காலம் பார்க்காமல் துணிச்சலாக பணியாற்றினார். இதையடுத்து, தமிழக அளவில் சிறந்த மாநகராட்சியாக கோவை தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னையில் நேற்று நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.50 லட்சம் வழங்கினார். மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பெற்றுக் கொண்டனர்.
சூலுார் சிஸ்டம் சூப்பர்
மாநில அளவில் சிறந்த பேரூராட்சியாக சூலுார் தேர்வு செய்யப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் சமச்சீராக குடிநீர் வழங்கப்படுகிறது. வீதிகளில் தெருவிளக்கு அமைக்கப்பட்டு உளளது. குப்பை மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. துாய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு கொடுப்பதால் கிடைத்த வருவாயில், தொழிலாளர்களுக்கு மிக்ஸி வழங்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ் பெற வருவோருக்கு பேரூராட்சி சார்பில் மரக்கன்று வழங்கப்படுகிறது.
இப்பேரூராட்சியின் தனித் தன்மையை ஆராய்ந்த தமிழக அரசு முதல் பரிசு வழங்கி, கவுரவித்திருக்கிறது. ரொக்கப் பரிசாக, 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி தலைவி தேவிக்கு, முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கி, கவுரவித்தார்.
கோவை மாவட்டத்துக்கு கிடைத்துள்ள இம்மூன்று பரிசுகளும், தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

