ADDED : செப் 29, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
கோவை: கீரணத்தம் பகுதியை சேர்ந்த சபரீஷ் மணிகண்டன், தந்தைக்கு சொந்தமான டஸ்ட்டர் காரில் நேற்று காலை, நீலம்பூர் நோக்கி அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இரு நண்பர்கள் உடனிருந்தனர். காரின் முன் பகுதியிலிருந்து திடீரென புகை வெளியேறியது. சபரீஷ் மணிகண்டன், உடனடியாக காரை ரோட்டோரமாக நிறுத்தினார். மூவரும் இறங்கினர்.
சில நொடிகளில் இன்ஜினில் தீ பிடித்தது. கார் முன்பகுதி முழுவதும் எரிந்தது. தகவல் அறிந்த பீளமேடு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அதற்குள் காரின் பெரும்பாலான பகுதி எரிந்திருந்தது.
பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். காரில் தீ பரவும் முன்பே, உஷாராக காரில் இருந்தவர்கள் அவசரமாக கீழே இறங்கியதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
