இடி, மழைக்கு வாய்ப்பில்லை சிறுவாணியில் 26 மி.மீ. மழை
இடி, மழைக்கு வாய்ப்பில்லை சிறுவாணியில் 26 மி.மீ. மழை
ADDED : ஆக 25, 2026 04:51 PM
கோவை: சிறுவாணி அணை உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் மழைப்பொழிவு தொடர்கிறது. நீர்ப்பிடிப்பு ஏரியாக்களில் 26 மி.மீ. அடிவாரத்தில் 30 மி.மீ. பெய்திருக்கிறது. 27.35 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. கோவை மக்களின் குடிநீர் தேவைக்கு 6 கோடி லிட்டர் எடுக்கப்பட்டது. மழைப்பொழிவு தொடர்வதால் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பிருக்கிறது.
பீளமேடு விமான நிலையம் – 4.40, வேளாண் பல்கலை – 8, பெ.நா.பாளையம் 4, கோவை தெற்கு – 8, தொண்டாமுத்துார் – 25, போத்தனுார் – 14.60, பொள்ளாச்சி – 21, ஆழியார் – 21.40, சின்கோனா – 68, சின்ன கல்லார் – 101, வால்பாறை – 67, சோலையாறு – 68 மி.மீ. மழை பதிவானது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன், ‘‘லேசானது முதல் மிதமான சாரல் விட்டு விட்டு பெய்யும்; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பில்லை. வளிமண்டலத்தின் அனைத்து அடுக்குகளிலும் அதிகப்படியான ஈரப்பதம் உள்ளது. லேசானது முதல் மிதமான சாரல் மழையையும், குளுகுளு வானிலையையும் கொடுக்கும். பாலக்காட்டு கணவாய் பகுதியை ஒட்டிய மேற்கு பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் மிதமான சாரல் மழை பெய்யும்,’’ என்றார்.
இவ்வாண்டு விட்டு விட்டு பெய்தாலும், சிறுவாணி நீர் மட்டம் ஓரளவு உயர்ந்திருக்கிறது. பருவ மழை செப்டம்பர் வரை இருக்கிறது. மேலும் உயர வாய்ப்புள்ளதால், குடிநீர் வடிகால் வாரியத்தினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
