/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் மேற்பார்வையாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கத்தில் சிக்கல்
/
பஸ் ஸ்டாண்டில் மேற்பார்வையாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கத்தில் சிக்கல்
பஸ் ஸ்டாண்டில் மேற்பார்வையாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கத்தில் சிக்கல்
பஸ் ஸ்டாண்டில் மேற்பார்வையாளர் இல்லாததால் 'டைமிங்' பிரச்னை! அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கத்தில் சிக்கல்
ADDED : மே 02, 2025 08:41 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில், அரசு போக்குவரத்துக்கழக சார்பில்மேற்பார்வையாளர் இல்லாததால், அரசு மற்றும் தனியார் பஸ்களின் இயக்கத்தில்'டைமிங்' முரண்பாடு நிலவுகிறது.
பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் மார்க்கமாக, தொலைதுார ஊர்கள் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, தனியார் மற்றும் அரசு பஸ்கள் மற்றும் உள்ளூர் டவுன் பஸ்கள் என, தினமும், 248க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மட்டுமே தினமும், 1,400 முறை பஸ்கள் வெளியேறும் நிலையில், சராசரியாக, 77 ஆயிரம் பயணியர் பயணிக்கின்றனர். இதேபோல, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயணிக்கின்றனர்.
ஆனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து, பஸ்கள் புறப்படும் நேரம் குறித்த கால அட்டவணை முழுமையாக இல்லை. கோவை, திருப்பூர், உடுமலை, பாலக்காடு, வால்பாறை வழித்தடங்களுக்கான பிரிவுகள் இருந்தும், அரசு போக்குவரத்துக்கழக மேற்பார்வையாளர் இல்லாததால், அரசு மற்றும் தனியார் பஸ்களின் இயக்கம் முறையின்றி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பஸ்கள், புறப்படும் நேரத்தில் பிரச்னை எழுகிறது. தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது. அந்த நேரத்தில், பஸ்களில் காத்திருக்கும் பயணியர் அவதிப்படுகின்றனர். போலீசாரும், மற்ற பஸ் ஊழியர்களும் தலையிட்டு வாக்குவாதத்தை சமரசம் செய்ய வேண்டியுள்ளது.
சில நேரத்தில், தனியார் பஸ்களுக்கு, முன்னுரிமை அளித்து, பயணியரை ஏறச் செய்து, புறப்பட்டு செல்ல போக்குவரத்து ஊழியர்கள் முற்படுகின்றனர். இதற்கு, பஸ் ஸ்டாண்ட் மேற்பார்வையாளர் இல்லாததே காரணம் என, அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்ட் மேற்பார்வையாளர், பஸ்களின் இயக்க நேரத்தை முறைபடுத்துவது, டிக்கெட் பரிசோதகர், 'சவுண்ட் பாய்' என, அரசு போக்குவரத்து கழகம் சார்ந்த பணியாளர்களின் பணிகளை முறைபடுத்துவது, பயணியரின் சிரமத்தை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், இப்பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாகவே உள்ளது. பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் பஸ்களின் இயக்கம் முறையாக இருப்பதும் கிடையாது.
தனியார் பஸ்கள், குறித்த நேரத்தில் இயக்கப்படாமல், தாமதமாக புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேநேரம், அரசு பஸ்கள் புறப்படுவதற்கு, குறைந்த நேர இடைவெளி மட்டுமே அளிப்பதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக, விசேஷ நாட்களில், பிரதான கோவில்களுக்கு தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
சமீபத்தில், சித்திரை அமாவாசை தினத்தன்று, சிறப்பு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால், பயணியர் பரிதவித்தனர். பஸ் புறப்படும் நேரத்தில் பிரச்னை எழுந்ததால், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
பயணியர் நலன் கருதியும், பஸ்களின் இயக்கத்தை முறைபடுத்தும் நோக்கிலும் விரைந்து மேற்பார்வையாளரை நியமிக்க, துறை ரீதியான உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.