/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் திருவிழா சிறக்க அறிவுரை! இணைந்து செயல்படணும்
/
கோவில் திருவிழா சிறக்க அறிவுரை! இணைந்து செயல்படணும்
கோவில் திருவிழா சிறக்க அறிவுரை! இணைந்து செயல்படணும்
கோவில் திருவிழா சிறக்க அறிவுரை! இணைந்து செயல்படணும்
UPDATED : ஜன 20, 2024 02:53 AM
ADDED : ஜன 20, 2024 02:23 AM

கோவை:'மருதமலை தைப்பூசத்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற, அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது; 25ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது; இவ்விழா, 28 வரை நடைபெற உள்ளது. இதேபோல், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிப்., 28ல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போக்குவரத்து நெறிமுறைகளை தெரியப்படுத்த வேண்டும். போதிய எண்ணிக்கையில் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மொபைல் டாய்லெட் வசதி, குடிநீர் வினியோகம் தடையின்றி மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடர் துாவி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். துாய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயாராக நிறுத்தி வைக்க வேண்டும்; தேவையான பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.
தேர்த்திருவிழா துவங்கும் முன், திருத்தேரின் சக்கரங்கள் மற்றும் தேர் வடம் ஆகியவற்றின் உறுதி தன்மையை பரிசோதித்து, தேர் இயங்குவதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வன விலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி பக்தர்கள் வழிபாடு செய்ய போதிய பாதுகாப்பு வழங்கவும், சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றவும் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி சப்ளை செய்யவும், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தேர் செல்லும் பாதைகளில் உள்ள மின் கம்பிகளை சரிவர கண்காணிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாராக நிறுத்தியிருக்க வேண்டும். முதலுதவி அளிக்க டாக்டர்களுடன் மருத்துவ முகாம் செயல்பட வேண்டும். தேர் செல்லும் பாதையில் மேடு, பள்ளம் இருந்தால், செப்பனிட வேண்டும்.
தேர்த்திருவிழா நடைபெறும் பிப்., 28 அன்று, நகர பஸ்கள் மற்றும் இதர வாகனங்களை மாற்று வழித்தடங்களில் அனுப்ப வேண்டும். மாநகராட்சி, காவல்துறை, கோவில் நிர்வாகம், மின்வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் ஹர்சினி, கோனியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி உட்பட பலர் பங்கேற்றனர்.