/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
/
அரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : பிப் 24, 2024 01:55 AM

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கவுள்ளது.
கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு மாசிமகத் தேர்த் திருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாக மண்டபத்தில், திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். அங்கு புண்ணியாக வாசனம், காப்பு கட்டும் பூஜை நடந்தது. பின், அரங்கநாத பெருமாளுக்கு பூணுால் அணிவிக்கப்பட்டது. ஹோமகுண்டம் வளர்த்து, திருக்கல்யாண வைபவத்தை அர்ச்சகர்கள் மேற்கொண்டனர். அர்ச்சகர்கள் சுரேஷ், திருவேங்கடம், மாலைகளை எடுத்து சென்று பக்தர்கள் நடுவில் நடனமாடி வந்து, ஸ்ரீதேவி, பூதேவிக்கு, அரங்கநாதர் பெருமாள் சார்பில் மாலை அணிவித்தனர்.
கோவில் ஸ்தலத்தார் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர், மஞ்சள் சூரணம் இடித்து சுவாமிக்கு வைத்தனர். மாங்கல்ய பூஜை நடந்த பின், அரங்கநாதப் பெருமாள் சார்பில், அர்ச்சகர்கள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு மாங்கல்யம் அணிவித்தனர். வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலி சரடு பிரசாதம் வழங்கப்பட்டது. தனியார் அமைப்பினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று தேரோட்டம்
இன்று அதிகாலை 5:30க்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கவுள்ளது.
விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவஹர், குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.