UPDATED : மே 30, 2026 04:16 PM
ADDED : மே 30, 2026 04:10 AM
சுகாதார அமைப்பின் அடிப்படைத் தேவையாக ரத்தம் உள்ளது. ரத்த மாற்று சேவைகள் உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. நோயாளிகளின் உயிர்காக்கும் சிகிச்சைக்கு ரத்த மாற்று முறை மிகவும் அவசியமானது.
ரத்த தானம் என்பது ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான தர்மமாகும். ஆரோக்கியமான மனிதர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். நீங்கள் தானம் செய்யும் ஒரு யூனிட் (350 மி.லி) ரத்தம், ஆபத்தில் இருக்கும் 3 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. ரத்த தானம் செய்பவர் முழு ரத்தம், சிவப்பு ரத்த அணுக்கள், ரத்த தட்டுகள், பிளாஸ்மா மற்றும் பிற ரத்தக் கூறுகளைத் தானமாக வழங்குபவர்கள் இதில் அடங்குவர். இவற்றை முழு ரத்தமாகவோ, அபரெசிஸ் முறை மூலமாகவோ வழங்கலாம்.
* ரத்த தானம் செய்பவரின் வயது, 18 வயது நிரம்பியவராகவும், 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம். ரத்த ஹிமோகுளோபின் அளவு, 12 கிராமிற்கு குறையாமலும், 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.* ரத்த தானம் செய்வபரின் எடை, 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.* கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.
ரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்: ரத்தப் பிரிவு, ரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு ரத்த தானம் அளிப்பவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் மேம்படுவதற்கும் உதவும். ரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய ரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என, கண்டறியப்பட்டுள்ளது. ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் ரத்த தானம் பயன்படுகிறது. ரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. எனவே ரத்ததானம் செய்வோம்; பலன் அடைவோம்.ரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.
