/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று பி.ஏ.பி. தினம் கொண்டாட்டம்! புதிய அறிவிப்புகள் வெளியோகுமென எதிர்பார்ப்பு
/
இன்று பி.ஏ.பி. தினம் கொண்டாட்டம்! புதிய அறிவிப்புகள் வெளியோகுமென எதிர்பார்ப்பு
இன்று பி.ஏ.பி. தினம் கொண்டாட்டம்! புதிய அறிவிப்புகள் வெளியோகுமென எதிர்பார்ப்பு
இன்று பி.ஏ.பி. தினம் கொண்டாட்டம்! புதிய அறிவிப்புகள் வெளியோகுமென எதிர்பார்ப்பு
ADDED : அக் 07, 2025 12:42 AM

பொள்ளாச்சி;பி.ஏ.பி. தினத்தில், இத்திட்டம் உருவாக பாடுபட்ட பிதாமகன்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேற்குத்தொடர்ச்சிமலைகளில் பெய்யும் மழை நீர், மேற்கு நோக்கி பாய்ந்து, வீணாக கடலில் கலப்பதை தடுத்து, அணைகள் கட்டி தேக்கி, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பயன் அளிக்கும் திட்டமாக, பி.ஏ.பி., திட்டம் உள்ளது.
கேரள - தமிழக அரசு ஒப்பந்தமிட்டு, மலைப்பகுதியில் ஒன்பது தொகுப்பு அணைகள் கட்டப்பட்டு, மலையை குடைந்து 49 கி.மீ., துாரம் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் மற்றும், 147 கி.மீ., துாரம் நீரை கொண்டு சேர்க்கும் பிரதான, பகிர்மான கால்வாய்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் என ஆசியாவிலேயே, சிறந்த நீர்ப்பாசன திட்டமாக பி.ஏ.பி., திட்டம் உள்ளது.
திட்டப்பணிகள் நிறைவுற்று கடந்த, 1961ம் ஆண்டு அக். 7ம் தேதி பாசன திட்டம் துவங்கப்பட்டன. இந்த நாளை, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
மேலும், பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில், 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, மகாலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம் ஆகியோர் திருவுருவச்சிலைகளுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்குகள் கட்டப்பட்டன.
பி.ஏ.பி. தினத்தையொட்டி, பொள்ளாச்சி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு பி.ஏ.பி. திட்டம் தந்த பிதாமகன்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அரசுத்துறை அதிகாரிகள், பாலாறு, ஆழியாறு திட்டக்குழு தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:
பி.ஏ.பி. திட்டம் தந்த பிதாமகன்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பி.ஏ.பி. தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பி.ஏ.பி. திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்கள், திட்டப்பணிகளில் ஈடுபட்டு உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது கடமையாகும்.
அதற்கு இந்த தினத்தை நாம் தவறாமல் கொண்டாட வேண்டும். மேலும், பி.ஏ.பி. திட்ட கால்வாய்கள் முழுவதுமாக புனரமைக்க, 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால் கால்வாய்கள் பராமரிக்கப்படும்.
ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த, ஒன்றரை மாதங்களுக்கு முன், உடுமலை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதற்காக கேரளாவுடன் பேச்சு நடத்தி பணிகளை துவக்க வேண்டும். இந்த நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, கூறினார்.