/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று உலக மனநல தினம்! மனநலம், உடல் நலம் நாணயத்தின் இரு பக்கம்
/
இன்று உலக மனநல தினம்! மனநலம், உடல் நலம் நாணயத்தின் இரு பக்கம்
இன்று உலக மனநல தினம்! மனநலம், உடல் நலம் நாணயத்தின் இரு பக்கம்
இன்று உலக மனநல தினம்! மனநலம், உடல் நலம் நாணயத்தின் இரு பக்கம்
ADDED : அக் 10, 2025 12:45 AM

கோவை; உடம்பு சரியில்லை என்றால், டாக்டரிடம் தயங்காமல் செல்லும் நாம், மனம் சரியில்லை என்றால் தயக்கம் காட்டுகிறோம். உடலுக்கு காய்ச்சல், தலைவலி போல் மனதுக்குள் பல்வேறு கோணங்கள் உள்ளன. அவை சார்ந்த புரிதல் சமூகத்தில் இல்லை என்றே கூற வேண்டும்.
உலக மனநல தினம் அக். 10ல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில், 'பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மனநல சேவைகளுக்கான வாய்ப்பு' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் மனநல சேவை கிடைக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம்.
இதுகுறித்து, கோவை மூத்த மனநல மருத்துவர் மோனி கூறியதாவது:
மனநலம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. மனநலம் சரியாக இல்லாவிட்டால், முற்றிலும் முடங்கி விடும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் ஏற்படும் இயற்கை பேரழிவான புயல், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், காட்டுத்தீ, போர், தொற்று நோய் பரவல் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மற்றும் உடல் சேதங்கள், உறவினர்களின் இழப்பு மனதுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுபோன்ற சமயங்களில், பயம், குழப்பம், தீய எண்ணங்கள், மன அழுத்தம், தன்னம்பிக்கை இழப்பு, உடல் பிரச்னை, துாக்கமின்மை, குடும்ப பிரிவுகள் என பல்வேறு பிரச்னைகளை வெளியே கூற முடியாமல், மவுனமாகவே துன்பப்படுகின்றனர்.
மனநலம் இல்லாமல் முழுமையான உடல் நலம் இருக்க முடியாது. மன நலமும் உடல் நலமும் நாணயத்தின் இரு பக்கம் போன்றது. உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, அதாவது மொத்த மக்கள் தொகையில், 13.6% பேருக்கு மனநல பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 90 வயதை கடந்தவர்கள் வரை பாதிக்கப்படுவது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது.
மனப்பதட்டம், மனச்சோர்வு, போதைப்பழக்கம், மனச்சிதைவு, தற்கொலைகள் ஆகியவை மனநல பாதிப்புகளின் விளைவுகளே. உலக அளவில் பதிவாகும் ஒவ்வொரு, 100 உயிரிழப்புகளில் ஒன்று தற்கொலை காரணமாக உள்ளது. 15 முதல் 29 வயது இளம் தலைமுறையினரிடம் தற்கொலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
மனநலம் குறைபாடு உள்ளவர்களில், 70-83 சதவீதம் பேர் சிகிச்சைக்கு வருவதில்லை. இதற்கு விழிப்புணர்வு இன்மை, வெட்கம், சமூக சூழல் காரணமாக உள்ளது. இந்திய இளைஞர்களில், 20-30 சதவீதம் பேர் மனநல பிரச்னைகளிலும், 70 சதவீத மாணவர்கள் கவலை, மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
போதுமான உறக்கம், ஆரோக்கியமான உணவு, மென்மையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம், சமநிலையான வாழ்க்கை முறை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்தல், தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனை பெறுவது எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் மனநல மருத்துவரை அணுக வேண்டியது மனநலத்துக்கு அவசியம். மனநல ஆலோசனை தேவைப்படுவோர், 14416 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.