/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 04, 2025 11:55 PM
பங்குனி உத்திரத் திருவிழா
பேரூர், பட்டீசுவரசுவாமி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் இன்று, காலை, 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, யாகசாலை பூஜை, இரவு, 8:00 மணிக்கு, மலர் ரதம் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.
ராமநவமி மகோற்சவம்
ஆர்.எஸ்.புரம், பொன்னுரங்கம் வீதி, 'லலிதா நிவாஸ்' 80ம் ஆண்டு ராமநவமி மகோற்சவ விழா நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு வேதபாராயணம், மாலை, 6:30 மணிக்கு, பிரம்மஸ்ரீ ஆங்கரை, ஸ்ரீமத் ராமாயண சொற்பொழிவு மற்றும் இரவு, 9:00 மணிக்கு, பஜனை நடக்கிறது.
சிறப்பு வேல் பூஜை
சூலுார், அத்தப்பகவுண்டன் புதுார், வேலவன் காவடிக்குழு சார்பில் பங்குனி உத்திரத்திருவிழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஆறுமுகக்காவடி முத்தரித்து சிறப்பு வேல் பூஜை நடக்கிறது. தொடர்ந்து, இரவு அன்னதானம் நடக்கிறது.
நுால் வெளியீடு
புதுவை இளவேனில் இயக்கத்தில், நாஞ்சில் நாடன் ஆவணப் படமும், தரு வெளியீட்டின் ஐந்து நுால்கள் வெளியிடப்படுகின்றன. அவிநாசி ரோடு, அண்ணாசிலை அருகில், ஆருத்ரா ஹாலில், மாலை, 5:00 மணி முதல் நிகழ்ச்சி நடக்கிறது. அரங்கில் சிறப்புத் தள்ளுபடியில் நுால்களைப் பெறலாம்.
15வது பட்டமளிப்பு விழா
நேரு தகவல்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கல்லுாரி சார்பில், 15வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களின், கோவை தெற்கு தலைவர் நந்தகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
தொழில் வழிகாட்டல்
அரசூர், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், 'இன்னோவ்சென்ஸ் 2025' என்ற நிகழ்ச்சி நடக்கிறது. கல்லுாரி அரங்கில், காலை 9:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர்.
ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா
கோவை மாவட்ட உடற்கல்விக் கழகம் சார்பில், பணி நிறைவு பெறும் கோவை கல்வி மாவட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு, பாராட்டு விழா நடக்கிறது. பீளமேடு, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியில், காலை, 9:30 மணிக்கு விழா நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இயர்லி கேரியர்ஸ் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் உதவி துணைத் தலைவர் கிருஷ்ணா பாலகுருநாதன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
உறுதிமொழி அணிவகுப்பு
62வது தேசிய கடல்சார் தினத்தை ஒட்டி, கோவை கடல்சார் கல்லுாரி சார்பில் உறுதிமொழியுடன் கூடிய அணிவகுப்பு நடக்கிறது. இந்திய கடல்சார் வர்த்தகக் கப்பல் அதன் பணிகள் மற்றும் முக்கியத்துவத்தை மக்களுக்கு வெளிகாட்டும் வகையில், அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.

