/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : அக் 18, 2024 11:17 PM

ஆராதனை விழா
அன்னுார், குன்னத்துார்புதுார், ஸ்ரீதேவி பூதேவி நாராயண மூர்த்திக்கு ஆராதனை விழா நடக்கிறது. காலை, 8:00 மணி முதல் திருமஞ்சன அபிஷேகம், நாம சங்கீர்த்தனம், மகா தீபாராதனை, அலங்கார பூஜை நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல், திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என போதிக்கும் பகவத்கீதை, இதுவே நேர்மறை எண்ணங்களை நோக்கி நம் ஆற்றலை செலுத்த உதவும் என்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதியில், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், 'பகவத்கீதை' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.
சிறப்பு அலங்காரம்
வீரகேரளம், ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை இன்று நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கவால பூஜை மற்றும் இரவு, 7:00 மணிக்கு, மகா அன்னதானம் நடக்கிறது.
இலக்கியங்களில் நிலவியல்
சத்தி ரோடு, குரும்பபாளையம், ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், சர்வதேச கருத்தரங்கு நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு துவங்கும் நிகழ்வில், 'தமிழ் இலக்கியங்களில் நிலவியல் பயன்பாடு' என்ற தலைப்பில், தமிழ் வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர்.
பட்டமளிப்பு விழா
கோவைப்புதுார், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், 35வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குனரகத்தின் இயக்குனர் வெள்ளைபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
அறிவியல் கண்காட்சி
காளப்பட்டி, சந்திரமாரி சர்வதேச பள்ளியில் அறிவியல் கண்காட்சி காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. பயிலரங்கு, மாணவர்கள் தயாரித்த அறிவியல் திட்டங்களின் கண்காட்சி, வல்லுனர்கள் சிறப்புரை மற்றும் கலந்துரையாடல் என, பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.
கட்டடவியலாளர் தினம்
தி இந்தியன் ஆர்க்கிடெக்சர் நிறுவனத்தின் கோவை மையம் சார்பில், சர்வதேச கட்டடவியலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில் காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. கண்காட்சி, கருத்தரங்கு, போட்டிகள் மற்றும் விவாத நிகழ்வுகள் நடக்கின்றன.
ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சி
தென்னிந்தியாவின் மிகப்பெரும், ஆட்டோ மோட்டார் கண்காட்சி அவிநாசி, கொடிசியாவில் நடந்து வருகிறது. கமர்சியல் வாகனங்கள், இ -வாகனங்கள், சரக்கு வானங்கள், புதிய வாகன தொழில்நுட்பம் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 மணி முதல் கண்காட்சியை பார்வையிடலாம்.
நாட்டிய விழா
பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், 23வது நாட்டிய விழா நடக்கிறது. 'பக்தி சம்பிரதாயத்தில் பெண் இசை அமைப்பாளர்களின் பங்கு' என்ற தலைப்பில் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவனில், மாலை, 6:00 மணி முதல் நாட்டிய ஆசிரியைகளுக்கு விருதும், நாட்டிய விழாவும் நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'ஆறு ஆற்றலும், இயக்கும் கருவியும்' என்ற தலைப்பில், பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.
சிறப்பு காலண்டர் வெளியீடு
ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில், 2025ம் ஆண்டுக்கான 'ஐ ஆம் ஸ்பெஷல்' என்ற சிறப்பு காலண்டர் வெளியிடும் நிகழ்வு நடக்கிறது. அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர்சில், மாலை, 5:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் காலண்டரை வெளியிடுகிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.